குடியரசுத் தின ஒத்திகை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்

குடியரசுத் தின ஒத்திகை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்

ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினம் காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வரும் 20, 22 மற்றும் 24-ம் தேதி குடியரசு தின ஒத்திகை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையின் பிரதான சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக சென்னை போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

இதுத்தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மேற்கண்ட தினங்களில் காமராஜர் சாலையில், காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை வாகனங்கள் அனுமதிக்கப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் வாகனங்கள் (மாநகர பேருந்துகள் உட்பட) காந்தி சிலை சந்திப்பிலிருந்து ராதாகிருஷ்ணன் சாலை வழியாக திருப்பிவிடப்படும். ராயப்பேட்டை மணிக்கூண்டு வழியாக அண்ணாசாலையை சென்றடையலாம்.

மயிலாப்பூர் சந்திப்பில் இருந்து சிவசாமி சாலை வழியாக காந்தி சிலையை நோக்கி வரும் மாநகர பேருந்து ராயப்பேட்டை மேம்பாலம் நோக்கி திருப்பிவிடப்படும்.

டாக்டர் நடேசன் சாலை மற்றும் அவ்வைசண்முகம் சாலை சந்திப்பு வழியாக காமராஜர் சாலையை நோக்கி வரும் வாகனங்கள் ஐஸ் அவுஸ் நோக்கி திருப்பி விடப்படும். இதேபோல டாக்டர் பெசன்ட் சாலையில் இருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பெசன்ட் மணிக்கூண்டு வழியாக ஐஸ் அவுஸ் நோக்கி திருப்பி விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாசதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிலையம் தற்காலிகமாக சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் அருகில் மாற்றம் செய்யப்படும். வாலாஜா பாயின்ட் மற்றும் அண்ணாசாலை சந்திப்பில் இருந்து போர் நினைவுச் சின்னம் நோக்கி வாகனங்கள் வர அனுமதி இல்லை என போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in