வேளாண் சட்டங்கள் வாபஸ்... வெற்றி யாருக்கு?

வாபஸ் அறிவிப்பை வெளியிடும் பிரதமர் மோடி...
வாபஸ் அறிவிப்பை வெளியிடும் பிரதமர் மோடி...

ஓராண்டுக்கும் மேல் தேசம் முழுவதும் பேசுபொருளாக இருந்த 3 வேளாண் சட்டங்களை, தனது பாணியில் ஒரேநாளில் திரும்பப் பெற்றிருக்கிறார் பிரதமர் மோடி. இத்தனை நாட்கள் போராடிவந்த விவசாயிகளை சந்தோஷமாக வீட்டுக்குப் போகுமாறும் கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற்றே ஆக வேண்டும் எனும் ஒற்றை நிபந்தனையுடன் தொடர்ந்து விவசாயிகள் நடத்திய போராட்டம், 600-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் மரணம், எதிர்க்கட்சிகளின் விமர்சனம், உச்ச நீதிமன்றத்தின் தலையீடு என ஏகப்பட்ட நிகழ்வுகளுக்குப் பின்னரும் அசைந்துகொடுக்காத மோடி அரசு, ஒரேநாளில் இந்த முடிவை எடுக்க தேர்தல் பயம்தான் காரணம் என்றே பரவலாக அறியப்படுகிறது. அத்துடன் இனி இவ்விவகாரம் என்னவாகும் எனும் ஆவலும் எழுந்திருக்கிறது.

அரசை அசைத்துப்பார்த்த அம்சங்கள்

உண்மையில், பாஜக அரசை எதிர்த்து இத்தனை மாதம் போராட்டம் நடத்திய விவசாயிகளும் சாமானியர்கள் அல்ல. பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் எனத் தத்தமது பகுதிகளில் அரசியல் போக்குகளைத் தீர்மானிக்கும் அளவுக்குப் பலம் வாய்ந்தவர்கள். குறிப்பாக, இப்போராட்டத்தை உக்கிரமாக முன்னெடுத்த பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் திகைத்தின் தந்தை மகேந்திர சிங் திகைத், உத்தர பிரதேசத்தின் முக்கியமான விவசாயத் தலைவர். வாஜ்பாய் உள்ளிட்ட பாஜக தலைவர்களோடு செல்வாக்கு கொண்டவர். சீக்கிய மதத்தினர், ஜாட் சமூகத்தினர் என வெவ்வேறு பிரிவினர் விவசாயிகள் எனும் ஒற்றைக் குடையில் ஒன்றிணைந்திருந்தது மோடி அரசுக்குப் பெரும் நெருக்கடியை உருவாக்கியது.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்படம்: ரவி சவுத்ரி

மறுபுறம், பயங்கரவாதிகள் எனும் பட்டம் முதல் காலிஸ்தான்காரர்கள் எனும் பழிச்சொல் வரை ஏராளமான வசவுகள், போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது வீசப்பட்டன. பெரும்பாலான ஆங்கில, இந்தி ஊடகங்கள் போராட்டம் நடத்தும் விவசாயிகள் குறித்த விமர்சனங்களைத்தான் அதிகமாக முன்வைத்தன. இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக மோடி அறிவித்த பின்னர், ‘நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களை இப்படி வீதிப் போராட்டங்கள் மூலம் திரும்பப் பெறவைப்பது தவறான முன்னுதாரணம்’ என்றும், ‘எதிர்க்கட்சிகள் இதை வைத்து அரசியல் ஆதாயம் தேடுகின்றன’ என்றும் பல சேனல்கள் முழங்கிவருகின்றன.

எல்லாவற்றையும் தாண்டி அசைந்துகொடுக்காமல் நின்று இதைச் சாதித்திருக்கின்றனர் விவசாயிகள். அரசியல் கட்சித் தலைவர்களைப் பக்கத்தில் அண்டவிடாதது, சாதி மத அடையாளங்களுக்குள் அடைபடாதது, கூட்டமைப்பு விதித்த கட்டுப்பாட்டை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்காதது, ஓரிரு அசம்பாவிதங்களைத் தவிர எந்த வகையிலும் வன்முறைக்கு இடம் தராதது என மிகுந்த கட்டுப்பாட்டுடன் விவசாயிகள் நடந்துகொண்டனர்.

நீடித்த பிரச்சினை

விவசாயம்தான் நாட்டின் ஜிடிபியில் 20 சதவீதம் பங்கு வகிக்கிறது. பெருந்தொற்றுக் காலத்தில் பிற துறைகளை ஒப்பிட, சொல்லிக்கொள்ளும் விதத்தில் இருந்தது விவசாய உற்பத்திதான். இதையெல்லாம் நன்கு அறிந்திருந்தபோதிலும் பெருந்தொற்றின் பிடியில் நாடு தவித்துக்கொண்டிருந்த நேரத்தில், விவாதங்களுக்கு இடம் கொடுக்காமல், விவசாய அமைப்புகளிடமும் ஆலோசனை நடத்தாமல் அவசரகதியில் மோடி அரசு கொண்டுவந்த இந்தத் திட்டங்கள் நாடு முழுவதும் பிரளயத்தை ஏற்படுத்தியதில் ஆச்சரியமில்லை!

போராட்டத்தில் பிரார்த்தனை செய்யும் முதியவர்...
போராட்டத்தில் பிரார்த்தனை செய்யும் முதியவர்...

இதற்கிடையே, போராட்டங்கள் உக்கிரமடைந்த நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்ததையடுத்து, இச்சட்டங்கள் அமலாவது நிறுத்திவைக்கப்பட்டது. எனினும், விவசாயிகள் பின்வாங்கவே இல்லை. முற்றிலுமாக 3 சட்டங்களையும் திரும்பப் பெற்றாக வேண்டும் என்று பிடிவாதம் காட்டினர். இப்போராட்டம் தொடர்பாகவும், அரசின் நிலைப்பாடு குறித்தும் சர்வதேச அளவில் எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளிப்பதில் காட்டிய அக்கறையை, விவசாயிகளின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்ப்பதில் அரசு தவறிவிட்டது. ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இருதரப்பும் காட்டிய பிடிவாதத்தால் பிரச்சினை நீடித்துக்கொண்டேயிருந்தது.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா

தேர்தல் சொன்ன பாடம்

இந்நிலையில், 13 மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களில் பாஜகவுக்கு ஏற்பட்ட சரிவு, அக்கட்சித் தலைமையை யோசிக்கவைத்தது. அந்தந்த மாநிலப் பிரத்யேகப் பிரச்சினைகளைத் தாண்டி, விவசாயிகள் போராட்டம்தான் முக்கியக் காரணியாக இருந்தது என்பது பாஜகவினருக்குப் புரிந்தது. பாஜகவின் வாக்குவங்கியாக இருக்கும் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் அதிருப்தி கவலையளிக்கக்கூடியது என பாஜக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் முதல் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் வரை பலரும் பாஜக தலைமைக்கு எடுத்துக்கூறினர்.

கூடவே, உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜகவின் வெற்றிவாய்ப்பு குறித்த சந்தேகங்கள் எழுந்தன. ஜாட் விவசாயிகள் அதிகம் நிறைந்த மேற்கு உத்தர பிரதேசத்தில் 100-க்கும் அதிகமான இடங்களை இழக்க வேண்டியிருக்கும் எனும் செய்தி, பாஜகவுக்கு எச்சரிக்கை மணி அடித்தது. உத்தர பிரதேசத்தில் ஆட்சியைத் தக்கவைப்பதுதான், 2024 மக்களவைத் தேர்தலில் மோடியின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் என்பதை, பாஜக தலைமை உறுதியாக நம்புகிறது. ‘மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்றால், யோகி மீண்டும் முதல்வராக வேண்டும்’ என்று அமித் ஷா தீவிரமாகப் பிரச்சாரம் செய்துவருகிறார். பஞ்சாப் காங்கிரஸில் இருக்கும் குழப்பங்களைப் பயன்படுத்தினாலும், அங்கு வெற்றி பெறுவது மிகக் கடினம் என்பதும் பாஜகவுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.

வெற்றியைக் கொண்டாடும் விவசாயிகள்...
வெற்றியைக் கொண்டாடும் விவசாயிகள்...-

இந்நிலையில், சீக்கியர்களை மனதில் வைத்து குருநானக் ஜெயந்தி தினமான நவ.19-ல் இந்த அறிவிப்பை மோடி வெளியிட்டிருக்கிறார். சீக்கியர்களைத் திருப்திப்படுத்த, திட்டமிட்டு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது கவனிக்கத்தக்கது. முதலில், பாகிஸ்தானில் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாராவுக்குச் செல்ல வசதியாக கர்தார்பூர் வழித்தடத்தை அரசு திறந்து வைத்தது. அடுத்த இரண்டே நாட்களில் இந்த அறிவிப்பும் வந்துவிட்டது. பஞ்சாபிலிருந்து மட்டுமல்ல உத்தர பிரதேசம், ஹரியாணா மாநிலங்களிலிருந்து வந்து போராடியவர்களில் சீக்கியர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னொருபுறம் வேளாண் துறையில் சீர்திருத்தங்கள் அவசியம் எனக் கருதுபவர்கள், மத்திய அரசின் இந்த முடிவால் அதிருப்தியடைந்திருக்கிறார்கள். உறுதியான நடவடிக்கைகளுக்குப் பெயர் பெற்ற மோடி, அரசியல் லாபத்துக்காக இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற்றுவிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. வேளாண் துறையில் சீர்திருத்தம் அவசியம்தான் எனக் கருதிய ‘தி இந்துஸ்தான் டைம்ஸ்’ உள்ளிட்ட நாளிதழ்களும், இவ்விஷயத்தை அரசு முன்னெடுத்துச் சென்ற விதம்தான் இந்தச் சட்டங்களைத் திரும்பப்பெறும் முடிவை நோக்கி அரசைத் தள்ளும் அளவுக்கு விவசாயிகளை வெகுண்டெழச் செய்ததாகப் பதிவுசெய்திருக்கின்றன.

மோடி மீது விமர்சனங்கள்

இப்போதும் விவசாயிகள் போராட்டத்தை விலக்கிக்கொள்ளவில்லை. நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக இச்சட்டங்கள் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும் என்றும், குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த உத்தரவாதத்தை எதிர்பார்த்தும் காத்திருக்கிறார்கள். முன்னதாக, வேளாண் சட்டங்களால் தங்களுக்கான சட்ட உரிமைகள் பறிபோய்விடும் என்பதும், கார்ப்பரேட் நிறுவனங்களின் அழுத்தத்துக்குப் பணிய நேரிடும் என்றும் விவசாயிகள் அஞ்சினர். இந்த விஷயங்களைப் பரிசீலித்து சட்டங்களை இயற்றியிருந்தால்கூட விவசாயிகளிடமிருந்து இவ்வளவு பெரிய எதிர்ப்பு எழுந்திருக்காது என்கிறார்கள். நாட்டில் நிலத்தடி நீர்ப் பற்றாக்குறை ஏற்படும் எனும் சூழலில், அதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பு விவசாயிகளிடம் இருக்கிறது.

இது தற்காலிகப் பின்வாங்கல்தான் என்றும் சிலர் கருதுகிறார்கள். மீண்டும் விவசாயத் துறைச் சீர்திருத்தம் எனும் பெயரில் மத்திய அரசு புதிய சட்டங்களைக் கொண்டுவருவதற்கு வாய்ப்புகள் நிறையவே உள்ளன. குறிப்பாக, அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்து அந்த முடிவை மத்திய அரசு எடுக்கும் என்றே பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அடுத்த முறை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதத்துக்கு வழிவிடுவதுடன் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்க வேண்டியிருக்கும்.

மசோதாக்கள் விஷயத்தில் எதிர்க்கட்சிகளைக் குறைசொல்லிக்கொண்டே தன் பொறுப்பிலிருந்து மத்திய அரசு தவறுவதை இனியும் மக்கள் சமூகம் ஏற்றுக்கொள்ளாது. ஏனெனில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்ட மசோதாக்களை எதிர்க்கட்சிகள் ஆதரிக்கவே செய்தன. இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு மட்டும் ஏன் இத்தனை எதிர்ப்பு என்பது தர்க்கரீதியான கேள்வியாகத் தொடரவே செய்யும்.

இனி என்ன?

வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்ததன் மூலம் கையைச் சுட்டுக்கொள்ளும் அளவுக்கு விளைவுகளை எதிர்கொண்ட பாஜக அரசு, இனி குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக, நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவருவதைக்காட்டிலும், இவ்விஷயத்தில் முடிவெடுக்கும் பொறுப்பை மாநில அரசுகளின் தலையில் சுமத்திவிடவும் வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கும் விளைச்சலின் அடிப்படையில் இந்த முடிவை மாநில அரசுகளே எடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துவிட்டால், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதற்குச் சமமாகிவிடும்.

கேப்டன் அமரீந்தர் சிங்
கேப்டன் அமரீந்தர் சிங்படம்: ஷாபாஸ் கான்

அரசியல் ரீதியாகவும் பாஜகவுக்குச் சவால்கள் தொடரவே செய்கின்றன. ஆரம்பத்தில் இந்தச் சட்டங்களை ஆதரித்ததாக அகாலி தளம் மீது பஞ்சாப் விவசாயிகள் கோபத்தில் இருக்கிறார்கள். எனவே, அக்கட்சியுடன் பாஜக மீண்டும் கூட்டணி அமைத்தாலும் எடுபடாது. வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வைத்துவிட்டு பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்போவதாக, காங்கிரஸிலிருந்து வெளிவந்து ‘பஞ்சாப் லோக் காங்கிரஸ்’ எனும் கட்சி தொடங்கியிருக்கும் கேப்டன் அமரீந்தர் சிங் கூறியிருந்தார். இந்தச் சட்டங்களை அரசு திரும்பப் பெற்றதில் அமரீந்தர் சிங்கின் பங்கு என்ன என்பது இன்னமும் முழுமையாக வெளியாகவில்லை.

அரசியல் ரீதியாக, மோடி அரசின் இந்தப் பின்வாங்கலை எதிர்க்கட்சிகள் விவசாயிகளுக்குக் கிடைத்த வெற்றியாக மட்டுமல்லாமல், தங்களுக்குக் கிடைத்த வெற்றியாகவும்தான் பேசுகின்றன. 600-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழக்கவும், லக்கிம்பூர் கெரியில் காரை ஏற்றி விவசாயிகள் படுகொலைசெய்யப்பட்டதற்கும் மத்திய அரசு காட்டிய அலட்சியமும், பாஜக தலைவர்கள் முன்னெடுத்த அராஜகப் போக்கும்தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் முழங்கத் தொடங்கியிருக்கின்றன. இது தேர்தல் களத்தில் எதிரொலிக்கும். இதையெல்லாம் எதிர்கொள்வது பாஜகவுக்குப் பெரும் சவாலாகவே இருக்கும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in