சிதம்பரம் கோயிலுக்குள் புகுந்தது போலீஸ் படை: எதிர்ப்புகளுக்கு இடையே தீட்சிதர்களின் பதாகை அகற்றம்!

தீட்சிதர்களின் பதாகையை  அகற்றும் அதிகாரிகள்
தீட்சிதர்களின் பதாகையை அகற்றும் அதிகாரிகள் சிதம்பரம் கோயிலுக்குள் புகுந்தது போலீஸ் படை: எதிர்ப்புகளுக்கு இடையே தீட்சிதர்களின் பதாகை அகற்றம்!

சிதம்பரம் நடராஜர்  கோயில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என தீட்சிதர்கள் வைத்திருந்த  பதாகையை பலத்த  எதிர்ப்புகளுக்கிடையே  அதிகாரிகள்  அகற்றினர்.

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் ஏறி வழிபட  பொதுமக்க்களுக்கு 24, 25, 26, 27 ஆகிய நான்கு நாட்கள் தடை விதித்து, தீட்சிதர்கள் பதாகை வைத்தனர். இதைப் பார்த்த பக்தர்கள், இது தமிழக அரசின் உத்தரவுக்கு எதிரானது என கடலூரில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 24-ம் தேதி மாலை  இந்து சமய அறநிலை துறையின் தில்லைக்காளி அம்மன் கோயில் செயல் அலுவலர் சரண்யா தலைமையில் சிதம்பரம் வட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் காவல்துறையினர் பதாகையை அகற்ற கோயிலுக்குள் சென்றனர். 

அப்போது காவல்துறை சார்பில் சரியான பாதுகாப்பு இல்லாததால், கோயில் தீட்சிதர்கள்  செயல் அலுவலரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனர். இதனால் கோயிலில் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில்  தீட்சிதர்களின் கூச்சலை சமாளிக்க முடியாமல் செயல் அலுவலர் கோயிலில் இருந்து திரும்பிச் சென்றார். 

இதுகுறித்த செயல் அலுவலர் சரண்யா,  அறநிலையத் துறை உயர் அதிகாரிகளுக்கும்,  காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்.

இதையடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று கோயிலில் ஆனித் திருமஞ்சனம் தரிசன விழா சிறப்பாக நடந்து முடிந்தது. இந்நிலையில் மாலை 4.30 மணியளவில் கடலூர் மாவட்ட இந்து அறநிலையத்துறை துணை ஆணையர் சந்திரன், சிதம்பரம் உதவி ஆட்சியர்(பொறுப்பு) பூமா, எஸ்.பி ரகுபதி மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாருடன் அதிரடியாக கோயிலுக்குள் புகுந்தனர். 

நேராக கனகசபை இருக்கும் இடம்  நோக்கிச் சென்றவர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த  பதாகையை அகற்றினர். அதற்கு தீட்சிதர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் போலீஸார் தீட்சிதர்களை  சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், அதிகாரிகளை தீட்சிதர்கள் முற்றுகையிட்டனர்.

இந்நிலையில்,  சிதம்பரம் நடராஜர்  கோயில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என தீட்சிதர்கள் வைத்திருந்த  பதாகையை பலத்த  எதிர்ப்புகளுக்கிடையே  அதிகாரிகள்  அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in