குட் நியூஸ்... மருத்துவக் காப்பீட்டில் மகத்தான மாற்றம்... வயது வரம்பு நீக்கம்!

குட் நியூஸ்... மருத்துவக் காப்பீட்டில் மகத்தான மாற்றம்... வயது வரம்பு நீக்கம்!

மருத்துவக் காப்பீடு எடுப்பதற்கான வயது வரம்பினை நீக்கம் செய்து காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளதால் இனி எந்த வயதினாலும் மருத்துவ காப்பீடு செய்து கொள்ள முடியும் என்கிற நிலை உருவாகியுள்ளது.

நமது நாட்டில்  மருத்துவக் காப்பீடுகளை எடுப்பதற்கான வயது வரம்பு 65 ஆக உள்ளது. அதற்கும் மேலான வயதுடையவர்கள் மருத்துவ காப்பீடு செய்து கொள்ள முடியாத நிலையே இருந்து வந்தது. இது முதியோருக்கு மிகுந்த சிரமத்தைக் கொடுத்தது. மருத்துவ சிகிச்சைக்கு எவ்வளவு செலவானாலும் தங்கள் கையில் இருந்தே பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதால் வயதானவர்கள் அவதிப்பட்டு வந்தனர். 

தற்போது இந்த வயது வரம்பை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்  நீக்கியுள்ளது. இதன் மூலம்  இனி அனைத்து வயதினரும் மருத்துவ காப்பீட்டை எடுக்கலாம். மேலும் மூத்த குடிமக்களுக்காக பிரத்யேக காப்பீடு திட்டங்களை செயல்படுத்துமாறு மருத்துவ காப்பீடு வழங்கும் நிறுவனங்களை ஐஆர்டிஏஐ கேட்டுக் கொண்டுள்ளது.

இதுதவிர மாணவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் என அனைவரும் பயனடையும் வகையிலான காப்பீடுகளை அறிமுகப்படுத்தவும், புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் போன்ற கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கென பிரத்யேக காப்பீடுகளை செயல்படுத்தவும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

மேலும் காப்பீடு எடுக்கும் வாடிக்கையாளர்கள் சலுகைகளை பெறுவதற்கான காத்திருப்பு காலத்தை குறைக்கவும் அது அறிவுறுத்தியுள்ளது. ஆணையத்தின் இந்த உத்தரவுகளால் இனி மருத்துவக் காப்பீடு என்பது அனைவருக்கும் பயன் தரும் அற்புதமான திட்டமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in