கனமழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டம்: 1,61,647 குடும்ப அட்டைதாரர்களுக்கு நாளை முதல் 1000 ரூபாய் நிவாரணம்

உமையாள்பதியில் சாலை மறியல்
உமையாள்பதியில் சாலை மறியல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிக மழை பொழிந்து பாதிப்புக்கு உள்ளான சீர்காழி, தரங்கம்பாடி தாலுகா பொதுமக்களுக்கு நாளை முதல் ரூ.1000 நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து நல்ல மழைப்பொழிவை கடலோர டெல்டா மாவட்டங்கள் சந்தித்து வருகின்றன. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 11 மற்றும் 12-ம் தேதிகளில்  சீர்காழி பகுதியில் 44 சென்டிமீட்டர் அளவுக்கு அதிக கனமழை பொழிந்து குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.  மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.  விளைநிலங்கள் வீணாகின.

இந்த நிலையில் கடந்த 14-ம் தேதியன்று மழை பாதிப்பு பகுதிகளை  முதல்வர் ஸ்டாலின் நேரில் வந்து பார்வையிட்டு ஆறுதல் கூறிச் சென்றார். அதனையடுத்து சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாக்களில் மழையால்  பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு 1000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அன்றைய தினமே அறிவிக்கப்பட்டது. ஆனால் சுமார் 12 தினங்கள் முடிவடைந்தும்கூட இந்த அந்த தொகை இன்னும் வழங்கப்படவில்லை.  இதனால் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு சென்ற உமையாள்பதி  கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள்  நிவாரணத் தொகை கேட்டு நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களை சமாதானப்படுத்தச் சென்ற ஒன்றியக்குழு தலைவர்,  சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர்களிடம்  கடுமையான வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து சீர்காழி,  தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள அனைவருக்கும் நாளை (நவ.24) முதல் அந்தந்த ரேஷன் கடைகளில் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவித்துள்ளார்.

அதன்படி சீர்காழி தாலுகாவில் உள்ள 145 நியாய விலைக் கடைகளில் 99,518 குடும்ப அட்டைதாரர்களுக்கும், தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள 94 நியாய விலைக் கடைகளில்  62,129 குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆக மொத்தம் 1,61,647 குடும்ப அட்டைதாரர்களுக்கு அந்தந்த பகுதிகளில் நியாய விலைக் கடைகள் மூலம் நாளை முதல் ரூ.1000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என லலிதா தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in