’முகேஷ் அம்பானி குடும்பம் லண்டனுக்கு குடிபெயரும் திட்டமில்லை’

ரிலையன்ஸ் நிறுவனம் விளக்கம்
’முகேஷ் அம்பானி குடும்பம் லண்டனுக்கு குடிபெயரும் திட்டமில்லை’
ஸ்டோக் பார்க் மாளிகை

முகேஷ் அம்பானியின் குடும்பம் இந்தியாவை விட்டு லண்டனுக்கு குடிபெயர்வதாக வெளியான தகவல்களை, ரிலையன்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரும், இந்திய பணக்காரர்களில் முதலிடத்தில் இருப்பவருமான முகேஷ் அம்பானிக்கு, பிரிட்டன் உட்பட பல்வேறு நாடுகளில் சொத்துகள் உண்டு. ரிலையன்ஸ் கிளை நிறுவனங்களின் பெயரிலான இந்த சொத்துகள் வணிகப் பயன்பாடுகளுக்காகவும், தனிப்பட்ட தங்குமிடங்களாகவும், முதலீடு நோக்கத்திலும் வாங்கப்பட்டுள்ளன. அந்த வகையில், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அண்ட் ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனத்தின் வாயிலாக லண்டனில் உள்ள ’ஸ்டோக் பார்க்’ என்ற மாளிகை, இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாங்கப்பட்டது. கோல்ஃப் உள்ளிட்ட விளையாட்டுகளில் பொழுதுபோக்க விரும்புவோருக்காகவும், கேளிக்கை விடுதியாகவும் இந்த மாளிகை இதற்கு முன்னர் பயன்பட்டு வந்தது.

முகேஷ் அம்பானி குடும்பம்
முகேஷ் அம்பானி குடும்பம்

வெளிப்புற கட்டிட வடிவமைப்பில் புராதனமும், உள்ளே நவீனமும் ஒன்று சேர்ந்த இந்த மாளிகை சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 49 படுக்கையறைகள் அடங்கிய இந்த மாளிகையின் சொத்து மதிப்பு ரூ.592 கோடி என்று சொல்லப்படுகிறது.

இந்த லண்டன் மாளிகைக்கு நிரந்தரமாக முகேஷ் அம்பானி குடும்பம் குடிபெயரப் போவதாகவும், மும்பையிலும் லண்டனிலும் சரிபாதியாக தங்கள் வருடாந்திரங்களை கழிக்கப் போவதாகவும் பலவிதமான செய்திகள் வெளியாகின.

மும்பை அன்டிலியா மாளிகை
மும்பை அன்டிலியா மாளிகை

உலகத்திலேயே உயர் மதிப்பு வாய்ந்த வீடுகளில் ஒன்றாக முகேஷ் அம்பானியின் அன்டிலியா மாளிகை விளங்கி வருகிறது. இயற்கை பேரிடர்களை தாங்கும் கட்டுமானமும், செல்வந்தர்களுக்கான சகல வசதிகளும், மருத்துவ மற்றும் பாதுகாப்பு அம்சங்களும் உள்ளடங்கியதாக அன்டிலியா அமைந்துள்ளது.

ஆண்டின் தொடக்கத்தில் இந்தக் குடியிருப்பின் அருகே வெடிபொருட்கள் நிரப்பிய கார் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதன் பின்னணியில் மகாராஷ்டிராவின் உயர் காவல் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. மத்திய பாஜக அரசுக்கும், மாநில சிவசேனை கூட்டணிக்கும் இடையிலான மோதலில் இந்த களேபரங்களும் சேர்ந்து கொண்டன. மும்பை போலீஸ் கமிஷ்னராக இருந்த பரம்பிர் சிங் முதல் மாநில உள்துறை அமைச்சராக இருந்த அனில் தேஷ்முக் வரை பலரும் வழக்கு விசாரணை என அலைகழிக்கப்பட்டு வருகின்றனர். இவற்றை முகேஷ் அம்பானி குடும்பம் ரசிக்கவில்லை எனத் தெரிகிறது.

இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காகவும், அன்டிலியாவுக்கு மாற்றாகவும் சர்வதேச தரத்திலான மாளிகையாக லண்டனின் ஸ்டோக் பார்க் சொத்து வாங்கப்பட்டது. இதை முகேஷ் அம்பானி குடும்பத்தினரின் தனிப்பட்ட ரசனைக்கேற்ப மாற்றும் பணிகள் அண்மையில் நிறைவடைந்தன. கரோனா காரணமாக அன்டிலியாவில் அடைந்திருந்த முகேஷ் அம்பானி குடும்பம், ஸ்டோக் பார்க்கில் சில காலம் செலவழிக்க உள்ளது.

மற்றபடி நிரந்தரமாக நாட்டை விட்டு வெளியேறப்போவதாக வெளியான தகவல்களை, ரிலையன்ஸ் குழுமம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in