
மூன்றாண்டுகளுக்கு பிறகு மீண்டும் திருக்கடையூரில் இன்று ரேக்ளா ரேஸ் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் தினத்தன்று மாடு மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெறுவது வழக்கம். அப்பகுதியில் உள்ள எட்டு ஊராட்சிகள் சார்பில் மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் நடைபெறும். இப்போட்டியில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொள்வார்கள்.
பாரம்பரியமாக நடைபெற்று வந்த இந்த பந்தயம் கடந்த மூன்று ஆண்டுகளாக கரோனா கட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் தடைப்பட்டு இருந்தது. நிலைமை சரியாகி எல்லா இடங்களிலும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்ற ஒரு நிலையில் இந்த ஆண்டு காணும் பொங்கல் தினமான இன்று வழக்கம்போல் எல்கை பந்தயம் தொடங்கி நடைபெறுகிறது.
இதற்காக அமிர்தவிஜயகுமார் தலைமையில் 30 பேர் கொண்ட விழாக்குழுவினர் நியமிக்கப்பட்டு அவர்களின் மேற்பார்வையில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கரிச்சான் குதிரை, நடுக்குதிரை, பெரிய குதிரை என்று மூன்று பிரிவுகளில் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயமும், பெரிய மாடு, நடமாடு, சின்னமாடு என்று மூன்று பிரிவுகளில் மாட்டுவண்டிகளுக்கான பந்தயமும் நடைபெற்று வருகிறது.
காலை 8 மணிக்குச் சிறிய மாடுகளுக்கான பந்தயம் திருக்கடையூர் வள்ளியம்மை ஆர்ச்சில் தொடங்கி என்.என்.சாவடி தொடக்கப்பள்ளி வரை 5 கி.மீ நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மதியம் 12 மணிக்கு நடு மாடுகள், பெரிய மாடுகளுக்கான பந்தயம் திருக்கடையூர் வள்ளியம்மை ஆர்ச்சில் தொடங்கி அனந்தமங்கலம் ஆர்ச் மற்றும் மகிமலையாறு பாலம் வரை நடைபெற்றது.
அதேபோன்று, குதிரைகளுக்கான ரேக்ளா ரேஸ் மதியம் 1.30 மணிக்கு திருக்கடையூர் வள்ளியம்மை ஆர்ச்யில் தொடங்கி தரங்கம்பாடி பேருந்து நிலையம் வரை 10 கி.மீ. நடைபெறுகிறது. முன்னதாக கால்நடை மருத்துவக் குழுவினர் பேட்டியில் பங்கேற்கும் மாடு மற்றும் குதிரைகளைப் பரிசோதனை செய்து தகுதிச்சான்றுகள் வழங்கி போட்டியில் கலந்து கொள்ள அனுமதித்தனர்.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்தப் பந்தயம் தற்போது மூன்றாண்டுகள் இடைவெளிகளுக்கு பிறகு நடைபெறுவதால் இதனை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.