பிரசவம் பார்க்க மறுப்பு; இரட்டை குழந்தையுடன் தமிழக பெண் மரணம்: கர்நாடகாவில் நடந்த கொடூரம்

பிரசவம் பார்க்க மறுப்பு; இரட்டை குழந்தையுடன் தமிழக பெண் மரணம்: கர்நாடகாவில் நடந்த கொடூரம்

கர்நாடகாவில் அரசு மருத்துவமனையில் தமிழக பெண்ணுக்கு பிரசவம் பார்க்க அரசு மருத்துவர்கள் மறுத்ததால் தாய், இரட்டை பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், தும்கூர் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் தெருவில் வசித்து வந்தவர் கஸ்தூரி (30). மதுரையைச் சேர்ந்த இவர் ஒரு மாதத்திற்கு முன்பு தும்கூருக்கு தனது 5 வயது மகளுடன் வந்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியான கஸ்தூரிக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தும்கூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கஸ்தூரி சென்றுள்ளார். அப்போது அவரிடம் ஆதார் அட்டை மற்றும் மருத்துவ அட்டையை கேட்டுள்ளனர் அங்கிருந்த மருத்துவர்கள். ஆனால் அவசரத்தில் அதனை எடுத்துச் செல்ல கஸ்தூரி மறந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கஸ்தூரிக்கு பிரசவம் பார்க்க அரசு மருத்துவரும், செவிலியர்களும் மறுத்துவிட்டனர். கஸ்தூரியை விக்டேடாரியா மருத்துவமனைக்கு செல்லுமாறு மருத்துவர் உஷா மற்றும் செவிலியர்கள் கூறியுள்ளனர். அந்த மருத்துவமனைக்கு கஸ்தூரி செல்லும் அளவுக்கு போதிய பண வசதி கிடையாது. இதனால் வேதனையுடன் கஸ்தூரி மீண்டும் தனது வீட்டிற்கு திரும்பிவிட்டார். இந்த நிலையில் கஸ்தூரிக்கு நேற்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. முதலில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பின்னர் மற்றொரு ஆண் குழந்தை பிறந்து கொண்டிருக்கும்போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு கஸ்தூரி மற்றும் இரண்டு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதைத்தொடர்ந்து அங்கிருந்து பொதுமக்கள், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து மூன்று பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இதனிடையே பணியில் கவனக்குறைவாக இருந்த மருத்துவர் உஷா மற்றும் இரண்டு செவிலியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தகவல் அறிந்து கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர், சம்பவ இடம் நடந்த மருத்துவமனைக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினார். அப்போது செய்தியாளரிடம் பேசிய அமைச்சர், இது ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு இனிவரும் நாட்களில் இதுபோன்று நடக்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பணியில் அலட்சியமாக இருந்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்றும் விரிவான விசாரணை நடத்தி அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு கர்நாடக அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க மறுத்ததோடு, கர்ப்பிணியும், இரண்டு குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in