கடவுளின் தேசத்தில் மழை, சதுரங்கம் விளையாடிக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் தொடர் மழையால் கர்நாடகாவும், தெலங்கானாவும் கதறி கொண்டிருக்கின்றன. தமிழகத்திலும் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கேரளா, கர்நாடக, தெலங்கானா மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆந்திராவிலும் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களான உத்தர கன்னடா, தக்ஷிண கன்னடா மற்றும் உடுப்பிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் 200 மி.மீ.க்கு மேல் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது, தாழ்வான பகுதிகளில் வெள்ளம் மற்றும் தண்ணீர் தேங்கியுள்ளது.
மங்களூரில் இன்று காலை பலத்த மழை பெய்தது. மங்களூர் மற்றும் கார்வார் கடற்கரையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
கேரளாவில் வயநாடு, கண்ணூர், மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் திங்கள்கிழமை 11 செ.மீ மழையும், திருச்சூரில் 4 செ.மீ மழையும் பதிவாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து மாநிலத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் நேற்று பெய்த கனமழையால் நகரின் பல இடங்களில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்று ஹைதராபாத்துக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மற்றும் ஆந்திராவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.