கனமழை காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை: எந்தெந்த மாநிலங்களுக்கு தெரியுமா?

கனமழை காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை: எந்தெந்த மாநிலங்களுக்கு தெரியுமா?

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா மற்றும் இமாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையத்தால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் சில மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தின் புனே, ரத்னகிரி, கொல்காபூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூலை 11- ம் தேதி வரை மகாராஷ்டிராவின் கொங்கன் பிராந்தியத்தில் உள்ள மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை நிறுவனம் எச்சரித்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தின் உடுப்பி, சிவமோகா, பெங்களூரு, குடகு, கலபுர்கி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உடுப்பி மாவட்டத்தில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏராளமான நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. ரெட் அலர்ட் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டதையடுத்து, பல மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஜூலை 9-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதால், மாநிலத்தின் சில மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவாவுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கோவா அரசு இன்று விடுமுறை அறிவித்தது.

இமாசலப் பிரதேசத்தின் காங்க்ரா, மண்டி, சிர்மௌர் மற்றும் சோலன் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிம்லா, பிலாஸ்பூர், ஹமிர்பூர் மற்றும் உனா மாவட்டங்களில் அடுத்த 4-5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தெலுங்கானாவிலும் பல பகுதிகளில் மழை பெய்துவரும் நிலையில் ஜூலை 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் அம்மாநிலத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குஜராத் மற்றும் டெல்லியின் சில பகுதிகளிலும் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in