ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிலைகள் மீட்பு: அடம்பிடித்த ஸ்தபதிக்கு எதிராக அதிரடி காட்டியது போலீஸ்

ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிலைகள் மீட்பு: அடம்பிடித்த ஸ்தபதிக்கு எதிராக அதிரடி காட்டியது போலீஸ்

ஆயிரம் ஆண்டுகள் பழமையான பல கோடி மதிப்புள்ள ஐந்து உலோக சிலைகள் உட்பட 8 சிலைகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர். போராட்டம் நடத்திய ஸ்தபதி உரிய ஆவணங்கள் கொடுக்காத பட்சத்தில் கைது செய்ய உள்ளனர் காவல்துறையினர்.

ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிலைகளை வெளிநாட்டிற்கு கடத்த இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு காவல்துறையினர் சோதனை நடத்த சென்றனர். ஆனால் அங்கு வீடு பூட்டப்பட்டு நீண்ட நாட்களாக ஆட்கள் இல்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த வீட்டின் உரிமையாளர் யார் என காவல்துறையினர் விசாரணை செய்த போது மாசிலாமணி என்கிற சிலை செய்யும் ஸ்தபதிக்கு சொந்தமானது என தெரியவந்தது.

மேலும் அவர் தற்போது தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சிவப்பு அருகே பதுங்கி இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். உடனே காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று உரிய ஆவணங்களுடன் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஐந்து உலோக சிலைகளும் 100 ஆண்டுகள் பழமையான 5 உலோக சிலைகள் உட்பட மொத்தம் 8 சிலைகளை மாசிலாமணிக்கு சொந்தமான இடத்தில் இருந்து மீட்டனர். குறிப்பாக ஆயிரம் ஆண்டுகள் பழமையான 200 கிலோ எடையுள்ள போக சக்தி தேவி உலோக சிலை, இரண்டு புத்தர் உலோகசிலைகள், ஆண்டாள் உலோக சிலை, விஷ்ணு உலோக சிலைகள் மற்றும் 100 ஆண்டுகள் பழமையான சிவகாமி அம்மன் சிலை, ரமண மகரிஷி சிலை, நடராஜர் சிலைகளை காவல்துறையினர் மீட்டனர். ஆனால் இந்த சிலைகள் அனைத்தையும் தான் செய்ததாக கூறி மாசிலாமணி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அங்கு இருந்த தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து கோடம்பாக்கத்தில் உள்ள மாசிலாமணி வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஐந்து சிலைகளும் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதை நிரூபிக்கும் வகையிலான தொல்லியல் துறை வழங்கிய தொன்மை சான்றுகளையும் மீட்டுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிலைகள் என சான்றிதழ் பெற்றுவிட்டு எப்படி தான் செய்ததாக மாசிலாமணி உரிமை கோருகிறார் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து மாசிலாமணியிடம் உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் அந்த எட்டு சிலைகளையும் மீட்டு சென்னை அசோக் நகர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஏழு நாட்களுக்குள் சிலைகளுக்கான உரிய ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் இல்லை என்றால் மாசிலாமணியை கைது செய்ய திட்டமிட்டு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வழக்கில் தொடர்புடைய மாசிலாமணி ஏற்கெனவே கடந்த 2017-ம் ஆண்டு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் தங்கத்தாலான உற்சவர் சிலை செய்வதில் நடந்த மோசடியில் ஈடுபட்ட 9 நபர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in