மறைத்து வைக்கப்பட்டிருந்த பலகோடி மதிப்புள்ள பழங்கால சிலைகள்: ஸ்கெட்ச் போட்டு அதிரடியாக மீட்ட போலீஸார்!

மீட்கப்பட்ட சிலைகள்
மீட்கப்பட்ட சிலைகள்

கும்பகோணத்தில் தனிநபரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான பழங்கால சிலைகளை சிலை கடத்தல் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த மாசிலாமணி என்பவர்‌ பல தொன்மைவாய்ந்த சிலைகளை கோடம்பாக்கம்‌ இல்லத்தில்‌ மறைத்து வைத்து இருப்பதாக சென்னை சிலை கடத்தல்‌ தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் ஏற்கனவே சிலை கடத்தல்‌ தடுப்பு பிரிவில்‌ சிவகாஞ்சி காவல்‌ நிலையத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

அதனையடுத்து சிலை கடத்தல்‌ தடுப்பு பிரிவு காவல்‌ கண்காணிப்பாளர்‌ ரவி தலைமையிலான குழுவினர்‌ கோடம்பாக்கம்‌ சென்று பார்க்க அங்கு சிலைகள்‌ ஏதும்‌ கிடைக்கவில்லை
ஆனாலும், விடாத போலீஸார் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மாசிலாமணி மேற்படி சிலைகளைத் தஞ்சாவூர்‌ மாவட்டம்‌ கும்பகோணத்திற்கு எடுத்துச்‌ சென்று வைத்திருப்பதாகவும்‌, அதை வெளிநாடுகளுக்கு கடத்தி பெரும்‌ லாபம்‌ அடைய திட்டமிட்டிருப்பதாகவும்‌ தெரிய வந்தது.

அதனையடுத்து சிலை கடத்தல்‌ தடுப்பு பிரிவு காவல்துறை இயக்குனர்‌ ஜெயந்த்முரளி மற்றும்‌ காவல்‌ துறை தலைவர்‌ தினகரன்‌, காவல்‌ கண்காணிப்பாளர்‌ சிலை திருட்டு தடுப்பு பிரிவு ரவி ஆகியோர்‌ மேற்பார்வையில்‌ தனிப்படை அமைக்கப்பட்டு உரிய தேடுதல்‌ ஆணையை கும்பகோணம்‌ நீதிமன்றத்தில்‌ இருந்து பெற்று கும்பகோணத்திற்கு விரைந்தனர். கும்பகோணம் சுவாமிமலை சர்வமானய தெருவில் உள்ள மாசிலாமணிக்கு சொந்தமான இடத்தில்‌ தேடுதல்‌ நடத்தினர்‌.

இந்த தேடுதல்‌ வேட்டையில்‌ பல கோடி ருபாய்‌ மதிப்புள்ள 8 பழங்கால சிலைகளையும்‌ அச்சிலைகளுக்குரிய தொல்லியல்‌ துறை சான்றிதழ்களையும்‌ கைப்பற்றினர்‌. இச்சிலைகளை மறைத்து வைத்திருந்தவர்களிடம்‌ சிலைகளை வைத்திருப்பதற்கான எந்தவிதமான ஆவணங்களும்‌ இல்லாத காரணத்தினால்‌ மேற்படி சிலைகள் சாட்சிகள் முன்னிலையில்‌ சிலை கடத்தல்‌ தடுப்பு பிரிவினரால்‌ கைப்பற்றப்பட்டது.

இந்த சிலைகளை மறைத்து வைத்திருந்த மாசிலாமணியிடம்‌ விசாரணை நடத்தியதில் அவரிடம்‌ சிலைகளின்‌ உரிமம்‌, அதன்‌ தோற்றம்‌ குறித்த விவரங்கள்‌ மற்றும்‌ ஆவணங்கள்‌ ஏதும்‌ இல்லாமல்‌ பழங்கால சிலைகளை வைத்திருந்ததற்கான முறையான விளக்கமும்‌ மற்றும்‌ அதை அவர்‌ யாரிடம்‌ இருந்து பெற்றார் என்பதையும்‌ அவரால்‌ கூற இயலவில்லை.

எனவே, மேற்படி சிலைகள்‌ எந்த கோயிலில்‌ இருந்து திருடப்பட்டது என்பதை விசாரணைக்கு பின்பே தெரிய வரும்‌ என்பதால்‌ கும்பகோணம்‌ சிலை கடத்தல்‌ தடுப்பு பிரிவு ஆய்வாளர்‌ இந்திரா கொடுத்த புகாரின்‌ பேரில்‌, சென்னை சிலை கடத்தல்‌ தடுப்பு பிரிவு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இத்‌தேடுதல்‌ வேட்டையின்‌ போது 12.1.2017 அன்று போகசக்ஜி தேவியின்‌ உலோகச்‌ சிலைக்கும்‌, 3.10.2011 அன்று விஷ்ணு, புத்தர்‌ சிலைகளுக்கும்‌ இந்தியத்‌ தொல்லியல்‌ துறை வெளியிட்ட தொல்பொருள்‌ சான்றுகளும்‌ ஒரு அலமாரியில்‌ ரகசியமாக வைக்கப்பட்டிருந்து கண்டுபிடிக்கப்பட்டன. இச்சிலைகள்‌ எந்த கோயில்களில்‌ இருந்து திருடப்பட்டது மற்றும்‌ சிலைகளைத் திருடிய குற்றவாளிகள்‌ மற்றும்‌ அவற்றின்‌ தொன்மை குறித்து விசாரணை நடந்து வருகிறது.
சிலைகளை ஆய்வு செய்த ஸ்ரீதரன்‌ சிலைகள்‌ அனைத்தும்‌ பழமையானவை என்றும்‌, 1000 ஆண்டுக்கு மேல்‌ பழமையானவை என்றும்‌ சிலை கடத்தல்‌ தடுப்பு பிரிவு குழுவிடம்‌ தெரிவித்துள்ளார்‌. விரைவாக விசாரணை நடத்தி சிலைகளை கைப்பற்றி குற்றவாளிகளைக் கைது செய்ததை காவல்துறை தலைமை இயக்குநர்‌ சைலேந்திரபாபு பாராட்டி, வெகுமதியையும்‌ அறிவித்துள்ளார்‌.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in