‘என்னை கடத்தி, படுகொலை செய்யப் பார்க்கிறார்கள்’

இம்ரான் கான் அறிவிப்பால் பாகிஸ்தானில் எகிறும் பதற்றம்!
குண்டுகள் பாய்ந்த காலில் கட்டுடன் இம்ரான் கான்
குண்டுகள் பாய்ந்த காலில் கட்டுடன் இம்ரான் கான்

‘நீதிமன்ற வழக்கின் பெயரில் என்னை கைது செய்ய முற்படுவது வெறும் நாடகம். என்னை கடத்தி, படுகொலை செய்வதே அவர்களின் உள்நோக்கம்’ என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இன்று அறிவித்ததில், பாகிஸ்தான் கலவரங்கள் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளன.

பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக ‘பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப்’ கட்சியின் தலைவரும், பிரதமர் பதவியை பறிகொடுத்தவருமான இம்ரான் கான் போராடி வருகிறார். அவர் முன்னெடுத்த நாடு தழுவிய பேரணிக்கு எதிராக அரசு பல்வேறு வகையிலும் முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இந்த போராட்டத்தின் இடையே படுகொலை முயற்சிக்கு ஆளானதில், காலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த பிறகும், இம்ரான் கான் அடுத்தக்கட்ட போராட்டத்துக்கு தயாராகி வருகிறார்.

இம்ரான்கானை முடக்கிப்போட, ’அரசு கருவூலத்தில் இருந்த பரிசுப் பொருட்களை முறைகேடாக விற்பனை செய்ததாக’ தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் இஸ்லாமாபாத் நீதிமன்றம் இம்ரான் கானை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது. இதனையடுத்து இம்ரான் கானை கைது செய்ய அவரது லாகூர் வீட்டுக்கு சென்ற போலீசாருக்கும் பிடிஐ கட்சியினருக்கும் இடையே மோதல் முளைத்தது.

இம்ரான் கான் கைது முயற்சிக்கு எதிராக இதர நகரங்களிலும் பிடிஐ கட்சியினர் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று தொடங்கிய இந்த மோதல்கள் இரண்டாம் நாளாக இன்றும் தொடர்ந்து வருகின்றன. போராட்டக்காரர்களை கலைக்க, தண்ணீர் பீரங்கிகள், கண்ணீர் புகை குண்டுகள் வரிசையில் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டதாக பிடிஐ கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

இது தொடர்பாக இன்று காலை இம்ரான் கான் வெளியிட்ட அறிவிப்பில், ’என்னை கைது செய்ய முற்படுவது வெறும் நாடகமே. கடத்தி, படுகொலை செய்வதே அவர்களின் உள்நோக்கம்’ என்று தெரிவித்திருக்கிறார். இத்துடன் இம்ரான்கான் வீட்டில் பாய்ந்த துப்பாக்கி தோட்டாக்களின் கூடுகளை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார். இம்ரானின் இந்த அறிவிப்பால் அங்கே மேலும் பதற்றம் கூடியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in