‘வரதட்சணை கொடுத்தால் அழகற்ற பெண்களுக்கும் திருமணமாகுமா?’

செவிலியர்களுக்கான பாடப் புத்தகத்தில் சர்ச்சை கருத்து
‘வரதட்சணை கொடுத்தால் அழகற்ற பெண்களுக்கும் திருமணமாகுமா?’

இந்தியாவில் வரதட்சணைக் கொடுமையால் நிகழும் குற்றங்கள் இன்றுவரை நின்றபாடில்லை. நாளிதழ்களில் ஏதேனும் ஒரு மூலையிலாவது வரதட்சணை தொடர்பான பாதிப்புகளை எதிர்கொள்ளும் பெண்கள், குடும்பத்தினர் குறித்த செய்திகள் வெளியாகின்றன. 2020-ம் ஆண்டு கணக்கின்படி, வரதட்சணைக் கொடுமை காரணமாக தினமும் சராசரியாக 20 பெண்கள் உயிரிழப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சொல்கிறது. உத்தர பிரதேசம், பிஹார் போன்ற மாநிலங்களில் நிலைமை படுமோசம்.

நிலைமை இவ்வாறு இருக்க, வரதட்சணையின் நன்மை, தீமைகளை விளக்குவதாகச் சொல்லிக்கொண்டு மிகவும் பிற்போக்குத்தனமான கருத்துகளைப் போதிக்கிறது ஒரு பாடப் புத்தகம்.

செவிலியர் கல்லூரிகளில் படிக்கும் மாணவ / மாணவிகளுக்கான சமூகவியல் பாடப் புத்தகத்தில், ‘வரதட்சணையின் பலன்கள்’ எனும் தலைப்பில் சர்ச்சைக்குரிய பல கருத்துகள் இடம்பெற்றிருக்கின்றன. டி.கே.இந்திராணி என்பவர் எழுதிய இந்தப் புத்தகம், இந்திய செவிலியர் கவுன்சில் பாடத்திட்டத்தின் அடிப்படையில் எழுதப்பட்டதாக அட்டையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வரதட்சணை மூலம் புதிய அறைகலன்கள், குளிர்பதனப் பெட்டி, வாகனங்கள் உள்ளிட்ட சாதனங்கள் கிடைக்கும்; அழகற்ற பெண்களுக்குக்கூட திருமணமாவதற்கு வரதட்சணை முறை உதவுகிறது என்றெல்லாம் கூறும் இந்தப் புத்தகம், சமீபகாலமாகப் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குக் கல்வி புகட்டுவதன் மூலம், குறைவான வரதட்சணை வழங்கும் சூழல் உருவாகியிருப்பதாகவும் குறிப்பிடுகிறது.

பிற்போக்கான இந்தக் கருத்துகளைக் கொண்ட பாடப் புத்தகத்தின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகியிருக்கிறது. கல்லூரி மாணவ / மாணவிகளுக்கான பாடப் புத்தகத்தில் இவ்வளவு மோசமான கருத்துகள் இடம்பெறுவதா என ட்விட்டர்வாசிகள் விளாசித்தள்ளியிருக்கிறார்கள்.

சிவசேனா மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி, இந்தப் புத்தகத்தின் பக்கம் அடங்கிய புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்ததுடன், இதுபோன்ற புத்தகங்களைப் பாடத்திட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்குக் கோரிக்கையும் விடுத்திருக்கிறார். இதுபோன்ற பாடங்கள் பாடத்திட்டத்தில் இருப்பது நமது நாட்டுக்கும் அரசமைப்புச் சட்டத்துக்கும் ஓர் இழுக்கு என்றும் அவர் விமர்சித்திருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in