அறிவிப்பு வெளியிட்டும் வரவேற்க ஆட்கள் வருவதில்லை: ஓபிஎஸ்சை கலாய்த்த எதிர்கட்சி துணைத்தலைவர்

நேரில் சென்று பார்வையிட்ட ஆர். பி. உதயகுமார்
நேரில் சென்று பார்வையிட்ட ஆர். பி. உதயகுமார்

எந்த அறிவிப்பும் இன்றி இபிஎஸ் வரும்போது தொண்டர்கள் திரண்டு வருகிறார்கள். ஆனால், சிலர் தென் மாவட்டத்திற்கு வருகை தருவதாக அறிவித்தும், எதிர்பார்த்த கூட்டம் இல்லாததால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது" என்று ஓபிஎஸ்சை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர். பி. உதயகுமார் மறைமுகமாக தாக்கினார்.

திருமங்கலம் தொகுதி கரடிக்கல் அனுப்பப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் வினோத்குமார் மற்றும் அன்பரசன் உள்ளிட்ட ஆறு பேர் திருவேடகம் அருகே உள்ள வைகை ஆற்றில் குளிக்க சென்றனர். வினோத்குமார், அன்பரசன் ஆகிய இருவரும் தண்ணீரில் மூழ்கினர். இதில் அன்பரசன் மட்டும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். காணாமல் போன வினோத்குமாரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர். பி. உதயகுமார், வைகை ஆற்றில் வினோத்குமாரை தேடும் பணி நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். தீயணைப்புத் துறை அதிகாரிகளிடமும், வருவாய்த்துறை அதிகாரிகளிடமும் நிலைமையைக் கேட்டறிந்தார். மேலும், ராணுவ வீரர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், " வெள்ளம் வருவதற்கு முன்பாக போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் அதை எடுக்க திமுக அரசு தவறியதால் தான் இன்றைக்கு மேட்டூரில் 2 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. அதே போன்ற சூழ்நிலை வைகை அணையில் உள்ளது. திமுக அரசு பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் இது போன்ற உயிர்ப்பலி ஏற்பட்டிருக்காது.

மதுரையில் சில நாட்களுக்கு முன்பாக கனமழையால் நான்கு பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர், இதுவரை அவர்களுக்கு எந்த நிவாரண உதவியும் கொடுக்கவில்லை, இது போன்ற காலங்களில் எடப்பாடி பழனிசாமி 10 லட்சம் வரை உயிரிழந்த குடும்பங்களுக்கு கொடுத்தார். அதேபோல் மீனவர்களுக்கு 20 லட்சம் வரை கொடுத்தார். மேலும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணங்கள், காப்பீட்டு தொகைகள், இடுபொருள்கள் போன்றவை உடனுக்குடன் வழங்கப்பட்டது" என்றார்.

தொடர்ந்து, " இபிஎஸ் தற்போது பழனி, காங்கேயம், தர்மபுரி போன்ற மாவட்டங்களுக்கு செல்கிறார். அவர் போகும் வழியெல்லாம் மக்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர். எந்தவித அறிவிப்பும் இல்லாமல் அவர் வரும் போது தொண்டர்கள் திரண்டு வருகிறார்கள். ஆனால், சிலர் தென் மாவட்டத்திற்கு வருகை தரும் போது அறிவிப்பு தருகின்றனர். ஆனால், எதிர்பார்த்த கூட்டம் இல்லாததால் அவர்களுக்கு தோல்வியே மிஞ்சுகிறது. எனவே, இன்றைக்கு கட்சியும், கழகத் தொண்டர்களும் இபிஎஸ் பக்கம் தான் உள்ளனர்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in