60 லட்சம் மதிப்புள்ள 581 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டு விட்டன மை லார்ட்!: போலீஸாரின் அறிக்கையால் நீதிபதி அதிர்ச்சி

60 லட்சம் மதிப்புள்ள 581 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டு விட்டன மை லார்ட்!:  போலீஸாரின் அறிக்கையால் நீதிபதி அதிர்ச்சி

60 லட்ச ரூபாய் மதிப்புள்ள 581 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டு விட்டதாக நீதிமன்றத்தில் போலீஸார் தாக்கல் செய்துள்ள அறிக்கை உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா பறிமுதல் வேட்டை தொடர்ந்தது. இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சுமார் 700 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நெடுஞ்சாலையில் நடத்திய மெகா கஞ்சா வேட்டையில் மதுரா காவல்துறை அதிகாரிகள் 581 கஞ்சாவை அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

இதில் ஷெர்கர் காவல் நிலையத்தில் 386 கிலோ கஞ்சாவும், நெடுஞ்சாலை காவல் நிலையத்தில் 195 கிலோவும் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், கஞ்சா கடத்தியவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடத்தல்காரர்களின் குற்றத்தை நிரூபித்து, தண்டனை அறிவிக்க பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை சமர்ப்பிக்குமாறு மதுரா காவல்துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து காவல்துறை சார்பில் கஞ்சாவின் மாதிரியை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். ஆனால் நீதிமன்றம் இதனை ஏற்க முடியாது என்றும், பறிமுதல் செய்யப்பட்ட 581 கிலோகஞ்சாவையும் காட்ட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதற்கு மதுரா காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஒரு அறிக்கையை சமர்பித்துள்ளனர். அதில், ஷெர்கர் மற்றும் நெடுஞ்சாலை காவல் நிலையங்களின் கிடங்குகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 581 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டதாக கூறப்பட்டிருந்தது. எலி தின்றதாக கூறப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ.60 லட்சமாகும். இதனால் அதிர்ச்சியடைந்த கூடுதல் மாவட்ட நீதிபதி, அதற்கான ஆவணங்களை நவ. 26-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை எலிகள் சாப்பிட்டதாக காவல் துறை அளித்த அறிக்கை தான், தற்போது உத்தரப்பிரதேசத்தில் பேச்சாக உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in