காவல் நிலைய பாதுகாப்பில் இருந்த 19 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டன: போலீஸாரின் பதிலால் நீதிபதி அதிர்ச்சி

காவல் நிலைய பாதுகாப்பில் இருந்த 19 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டன:  போலீஸாரின் பதிலால் நீதிபதி அதிர்ச்சி

சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட 19 கிலோ கஞ்சாவை எலிகள் தின்று விட்டதாக காவல் துறை எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலால், கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்ட 3 பெண்களை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 2018-ம் ஆண்டு கஞ்சா விற்றதாக சேலத்தைச் சேர்ந்த கல்பனா, விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த குமாரி, நாகமணி ஆகிய மூன்று பெண்களையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக கோயம்பேடு போலீஸார் தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கு போதைப் பொருள் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மூன்று பெண்களிடமிருந்து பறிமுதல் செய்ததாக கூறப்படும் 30 கிலோ கஞ்சாவில், 11 கிலோவை மட்டுமே காவல் துறையினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

முதல் தகவல் அறிக்கையிலும், குற்றப்பத்திரிக்கையிலும் பறிமுதல் செய்தது 30 கிலோ கஞ்சா என குறிப்பிட்டிருக்க, நீதிமன்றத்தில் சமர்பித்ததில் 19 கிலோ கஞ்சா குறைந்தது எப்படி என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு, காவல் துறை சார்பில், "குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு காவல் நிலையத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது. ஆனால்,காவல் நிலைய கட்டிடம் பழுதடைந்து, பாதுகாப்பு இல்லாமல் இருந்ததால் மழையால் பாதிக்கப்பட்டும், எலிகள் தின்றதாலும் அதன் அளவு குறைந்துவிட்டது" என்றும் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கப்பட்டது.

இந்த பதிலால் அதிருப்தியடைந்த நீதிபதி, இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்களை சமர்ப்பிக்க தவறியதால் குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை என்ற அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பெண்களையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இதேபோல் உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா காவல் துறையினர் 2018-ம் ஆண்டு கஞ்சா வேட்டையில் 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள 581 கிலோ கஞ்சாவை எலிகள் தின்று விட்டதாக நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in