15,000 வேலைவாய்ப்பு உறுதி செய்யும் சி-295 ஏர்பஸ் விமான ஒப்பந்தம்

ரத்தன் டாடா வரவேற்பு
 ‘சி-295’ ரக போக்குவரத்து விமானம்
‘சி-295’ ரக போக்குவரத்து விமானம்’தி இந்து’ கோப்புப் படம்

ஏர்பஸ் விமான நிறுவனம் தயாரிக்கும் ‘சி-295’ ரக போக்குவரத்து விமானங்கள் 56 வாங்க செய்துகொள்ளப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்தத்தை டாடா அறக்கட்டளைத் தலைவர் ரத்தன் டாடா இன்று (செப்.24) வரவேற்றார்.

விமானப் போக்குவரத்தையும் விமானப் போக்குவரத்துத் துறையையும் வளர்க்க இது பேருதவியாக அமையும் என்றார்.

இந்திய விமானப்படை இப்போது போக்குவரத்துக்கு ‘ஆவ்ரோ-748’ ரக விமானங்களைப் பயன்படுத்தி வருகிறது. ‘ஏர்பஸ்’ விமானங்கள் நவீனமானவை, அதிக திறன் கொண்டவை, நம்முடைய தேவைகளுக்கு மிகவும் பொருத்தமானவை. ஒப்பந்தம் போடப்பட்டுள்ள 56 விமானங்களில் முதல் 16 விமானங்கள் ஸ்பெயின் நாட்டின் செவில்லி என்ற ஊரிலிருந்து, முற்றாகத் தயாரிக்கப்பட்ட நிலையில் பறந்து இந்தியா வந்து சேரும்.

எஞ்சிய 40 விமானங்களை ஏர்பஸ் டிஃபன்ஸ் அண்ட் ஸ்பேஸ் நிறுவனம், டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் (டிஏஎஸ்எல்) நிறுவனம் இணைந்து இந்தியாவிலேயே தயாரிக்கும். சி-295 ரக விமானங்கள் பல்வேறு பணிகளுக்கும் பயன்படுத்தப்படக்கூடிய விமானமாகும். இந்த ஒப்பந்தத்தால், இவற்றை இந்தியாவிலேயே முழுக்கத் தயாரிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்துக்காக ஏர்பஸ் டிஃபன்ஸ் அண்ட் ஸ்பேஸ் நிறுவனம், டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஆகிய மூன்றும் பாராட்டுக்குரியவையாகின்றன என்றார் டாடா.

இந்த ஒப்பந்தம் காரணமாக, சர்வதேச தரத்தில் விமானத்துக்குத் தேவையான உதிரி பாகங்களையும் கருவிகளையும் இந்தியாவிலேயே தயாரித்துவிட முடியும். இப்படியொரு முயற்சியை இதற்கு முன்பு எடுத்ததே இல்லை. இந்த விமானம் நவீனத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படுவது. இந்தியாவிலேயே தயாரிப்போம் என்ற லட்சியத்துக்கு ஏற்ப ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இந்த கூட்டுத் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கிய இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. முதல் 16 விமானங்கள் அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்று ஏர்பஸ் நிறுவனம் தெரிவிக்கிறது.

“அனைத்து விமானங்களிலும், இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் உள்நாட்டு மின்னணு போர்ச் சாதனங்கள் பொருத்தப்படும். இந்த ஒப்பந்தம் காரணமாக விமானங்கள் மற்றும் அதனுடன் இணைந்த கருவிகள் தயாரிப்பில் இந்தியாவுக்குள் வளர்ச்சி ஏற்படும். இதனால் கோடிக்கணக்கான ரூபாய் அன்னிய முதலீடு பெருகும். நேரடியாக 15,000 தொழில் திறனாளர்களுக்கு வேலை கிடைக்கும். அடுத்த 10 ஆண்டுகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மறைமுகமாக வேலை கிடைக்கும்” என்று ஏர்பஸ் டிஃபன்ஸ் அண்ட் ஸ்பேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மைக்கேல் ஷூல்ஹார்ன் தெரிவிக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in