
மாடலிங் தொழிலுக்கு வந்த இளம்பெண்ணின் ஆபாச புகைப்படங்களைக் காட்டி நிறுவனத்தின் உரிமையாளர் 3 ஆண்டுகளாக அவரைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பீகாரில் உள்ள பாகல்பூரைச் சேர்ந்த இளம்பெண் மாடலிங் தொழிலுக்காக ஜார்க்கண்ட் தலைநகரான ராஞ்சிக்கு வந்துள்ளார். அங்கு தன்னை யாஷ் என்று அறிமுகப்படுத்திய தன்வீர் கானுடன் இளம்பெண்ணுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. தன்வீர் கான் மாடலிங் பயிற்சி நிறுவனம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மும்பையில் உள்ள வெர்சோவா காவல் நிலையத்தில் மாடலிங் இளம்பெண், தன்வீர் கான் மீது பரபரப்பு புகார் கூறியுள்ளார். அதில், " மாடலிங் ஆர்வத்தில் வந்த தன்னை தன்வீர் கான் தொடர்ந்து துன்புறுத்தியும், மிரட்டியும் வந்தார். உனது ஆபாசப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியே கடந்த 2021-ம் ஆண்டு முதல் என்னை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக ராஞ்சியில் இருந்து மும்பை சென்றேன். ஆனால், அங்கும் என்னைத் தொடர்ந்து வந்த தன்வீர் கான், தன்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், அதற்காக இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும் என்று துன்புறுத்தினார். இதை யாரிடமாவது தெரிவித்தால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" என்று மிரட்டினார் என்று புகாரில் கூறியுள்ளார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட பெண் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், ஜார்க்கண்ட் முதல்வர் தனக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், தன்வீர் கான் மீது ஆறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அத்துடன் இந்த வழக்கை ராஞ்சி காவல் துறைக்கு மாற்றியுள்ளனர். ஆனால், இந்த வழக்கில் இதுவரை எந்த நடவடிக்கையும் ராஞ்சி போலீஸார் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், மாடலிங் இளம்பெண்ணின் குற்றச் சாட்டுக்களை தன்வீர் கான் மறுத்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை. அவர் எனது நிர்வாண புகைப்படங்களை எனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே பரப்பினார். நான் சேமித்து வைத்துள்ள சர்வதேச, இந்திய மாடலிங் புகைப்படங்களின் தரவுகளைத் திருட முயன்றனர். இதற்கு அவர் தனது நண்பர்கள் மற்றும் காதலனின் உதவியைப் பெற்றார் " என்று கூறியுள்ளார். இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.