
இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் பாலியல் பலாத்காரம், பலாத்கார முயற்சி, வரதட்சணை புகார்கள் அதிகரித்துள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மக்களவையில் ஒரு கேள்விக்கு, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிலளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், " கடந்த 2022-ம் ஆண்டு 357 வரதட்சணை புகார்களும், 2021-ம் ஆண்டு 341 புகார்களும், 2020-ம் ஆண்டு 330 வரதட்சணை புகார்கள் வந்துள்ளன. 2022-ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் பலாத்கார முயற்சி என்ற வகையில் 1,710 புகார்களும், 2021-ம் ஆண்டு 1,681 புகார்களும், 2020-ம் ஆண்டு 1,236 புகார்களும் பெறப்பட்டுள்ளன" என்று கூறினார்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் இரானி, "இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை, 764 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள், 411 பிரத்யேக போக்சோ நீதிமன்றங்கள் 28 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் செயல்படுகின்றன, அவை 1 லட்சத்து 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளைத் தீர்த்து வைத்துள்ளன" என்று கூறினார்.