தனது ஊதியம் 8 லட்சத்தை திரும்ப கொடுத்து நெகிழவைத்த ராமநாதபுரம் இன்ஜினியர்!

தனது ஊதியம் 8 லட்சத்தை திரும்ப கொடுத்து நெகிழவைத்த ராமநாதபுரம் இன்ஜினியர்!

ராமநாதபுரம் அருகே வழுதூரில் பள்ளிவாசல் கட்டுமான பணிகளை மேற்கொண்ட இன்ஜினியர் பால் பாண்டியன், தனக்கு கொடுத்த ஊதியம் 8 லட்சத்தை ஜமாத் நிர்வாகத்திடம் திரும்ப கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்ன தொழில் செய்தாலும் அதில் லாபமே பிரதானமாக உள்ளது. ஒரு சிலர் அதிக லாபமீட்டி, தொழிலை மேலும் விரிவுபடுத்தி வருகின்றனர். இத்தகைய எண்ணம் கொண்டவர்கள் மத்தியில், தனக்கு கொடுத்த ஊதியத்தை ராமநாதபுரத்தை சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் திரும்ப ஒப்படைத்த நெகிழ்ச்சி சம்பவம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் அருகே வழுதூரில் வளைகுடா நாடுகளின் கட்டட பாணியில் வடிவமைத்து கட்டி முடித்த ஜும்ஆ பள்ளிவாசல் கடந்த 18-ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இந்த பள்ளிவாசல் கட்டுமான போட்டியில் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டன.

இதில், ராமநாதபுரம் ரத்னா பில்டர்ஸ் வடிவமைத்த டிசைன் தான் வழுதூர் ஜமாத் நிர்வாகத்தார், ஊர் மக்களுக்கும் மிகவும் பிடித்து போனது. இதையடுத்து புதிய பள்ளிவாசல் கட்டுமான பணிகள் ரத்னா பில்டர்ஸ் வசம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டு காலம் நடந்த பள்ளிவாசல் கட்டுமானப் பணி நிறைவுக்கு பின் கடந்த 18-ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. ஓமன் நாட்டு டிசைனை வாங்கிய இன்ஜினியர் பால் பாண்டியன், பள்ளிவாசலின் உள், வெளிப்புறங்களில் பொருத்திய ஆர்க்கிடெக்ட் டிசைன் பொருட்கள் அனைத்தையும் துபாயில் இருந்து வாங்கியுள்ளார். கட்டுமான பணிகளுக்கான தொகை போக, பள்ளிவாசல் டிசைன், ஆலோசனை ஆகியவற்றிற்காக கடந்த 5 ஆண்டுகளில் பால் பாண்டியனுக்கு 8 லட்சம் ஊதியம் கொடுக்கப்பட்டது. அத்தொகையை ஜமாத் நிர்வாகத்திடம் திரும்ப கொடுத்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இது குறித்து பால்பாண்டியன் கூறுகையில், ``சர்வதேச தொழில் நுட்பத்தில் நிறைய கட்டடங்கள் கட்டிக்கொடுத்துள்ளோம். ஆண்டவன் கொடுத்த அறிவுக்கு இறைவனிடம் கட்டணம் வாங்குவது நியாயமில்லை. ஆண்டவனிடம் போட்டியிடக்கூடாது. இதனால், பணத்தை திரும்ப கொடுத்துவிட்டேன்" என்றார். சமூக வலைதளத்தில் உலாவரும் பால்பாண்டியனின் தன்னடக்கத்தை வெளிநாடுகளைச் சேர்ந்த பலர் பாராட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in