காதலியை கழுத்தை அறுத்து கொன்று சிறைக்கு சென்றவர்: ஜாமீனில் வந்த காதலன் உயிரை மாய்த்த சோகம்

ராமச்சந்திரன்-  சுவேதா
ராமச்சந்திரன்- சுவேதா காதலியை கழுத்தை அறுத்து கொன்று சிறைக்கு சென்றவர்: ஜாமீனில் வந்த காதலன் உயிரை மாய்த்த சோகம்

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் தனது  காதலியை  கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு, தானும்  தற்கொலைக்கு முயன்று‌ உயிர் பிழைத்த  காதலன்,  ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளளது.

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அடுத்துள்ள ஆதமங்கலம் ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் மகன் ராமச்சந்திரன் (27). பொறியியல் பட்டதாரியான  இவரும் சென்னை  குரோம்பேட்டை ராதாநகரைச் சேர்ந்த மதியழகன் மகள் சுவேதா(21) என்பவரும்  காதலித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில்  சுவேதா ராமச்சந்திரனிடம் பேசுவதை நிறுத்தி உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ராமச்சந்திரன்  கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதியன்று  சென்னை தாம்பரம் ரயில் நிலையம் பகுதியில் சுவேதாவை சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது  ஏற்பட்ட வாக்குவாதத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுவேதாவின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சுவேதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து அங்கேயே தனது கழுத்தையும்‌ அறுத்துக் கொண்டு ராமச்சந்திரன் தற்கொலைக்கு முயன்றார். விரைந்துவந்த போலீஸார் ராமச்சந்திரனை  மீட்டு  மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்கு பின்   போலீஸாரால் கைது செய்யப்பட்டார். செங்கல்பட்டு மாவட்டம், சேலையூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒரு  ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவித்துவிட்டு அண்மையில்தான்  ஜாமீனில் வெளியேவந்தார்.

மேலும் இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் மீண்டும் நீதிமன்றத்தில்  ஆஜராக வேண்டிய‌ நிலையில், நேற்றிரவு தனது சொந்த ஊரில் இருந்த அவர் சுவேதாவின்  நினைவாகவே இருந்ததாக கூறப்படுகிறது.  

இந்த நிலையில் வீட்டில் படுத்திருந்தவர் திடீரென காணாமல் போனதால் பெற்றோர் அவரை தேடிச் சென்றுள்ளனர்.  அப்போது வீட்டின் பின்புறப்பகுதியில் உள்ள புளியமரம் ஒன்றில் தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள  அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். 

தொடர்ந்து அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில்  அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்  ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதனையடுத்து  பிரேத பரிசோதனைக்கு பின்னர்  அவரது உடல் உறவினர்களிடம்  இன்று ஒப்படைக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக வலிவலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்த காதலன் ஆண்டுகள் கடந்தும் அவர் நினைவாகவே இருந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளது அப்பகுதியில் பெரும்  சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in