கனவில் வந்த ராமர், கிருஷ்ணர்: உபியின் ஆன்மிக அரசியல்

தேர்தல் களத்தில் கடவுளரை அழைக்கும் கட்சித் தலைவர்கள்!
கனவில் வந்த ராமர், கிருஷ்ணர்: உபியின் ஆன்மிக அரசியல்
லக்னோவில் பரசுராமருக்கு கோயில் கட்டி தரிசிக்கும் அகிலேஷ்

அயோத்தி ராமரும், மதுராவின் கிருஷ்ணரும் தம் கனவில் வந்ததாக கட்சித் தலைவர்கள் கூறத் தொடங்கி உள்ளனர். கடவுளரை சாட்சிக்கு இழுத்து, உபியில் அரசியல் காட்சிகள் அரங்கேறி வருகின்றன.

உபியில் 2022-ம் ஆண்டுக்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கானத் தீவிரப் பிரச்சாரத்தை அரசியல் கட்சிகள் தொடங்கி நடத்தி வருகின்றன. இதில், அயோத்தி ராமரையும், மதுராவின் கிருஷ்ணரையும் கூட விட்டுவைக்காமல் சாட்சிக்கு இழுப்பதும் அதிகரித்துள்ளது. இந்த 2 கடவுள்களும் தத்தம் கனவில் வந்ததாக கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டு, ஆன்மிக அரசியலை தொடங்கி உள்ளனர்.

இந்து மத நம்பிக்கையின்படி, மகாபாரதப் போரின்போது அர்ஜுனன் கனவில் கிருஷ்ணர் வந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் கிருஷ்ணர் கூறியபடி, கைலாச மலைக்குச் சென்று சிவனை தரிசித்த அர்ஜுனனுக்கு பசுபதியின் ஆயுதம் கிடைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் புராண சம்பவத்தால், கிருஷ்ணர் கனவில் வந்தால் வரும் நாட்களில் நல்லது நடக்கும் என்பதும் பொதுமக்களின் பரவலான நம்பிக்கையாக உள்ளது.

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சமாஜ்வாதியினர் தம் தலைவருக்கு கதாயுதம் அளிக்கின்றனர்
தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சமாஜ்வாதியினர் தம் தலைவருக்கு கதாயுதம் அளிக்கின்றனர்

இதை மையமாக வைத்து, பாஜகவின் மக்களவை எம்பி ஹர்நாத்சிங் யாதவ், கடந்த ஜன.2-ல் ஆன்மிக அரசியலை தொடங்கி வைத்தார். அவர், ‘தன் கனவில் வந்த கிருஷ்ணர் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் சட்டப்பேரவை தேர்தலில் மதுரா தொகுதியில் போட்டியிட வேண்டும்’ என விரும்புவதாகத் தெரிவித்திருந்தார். இதைக் குறிப்பிட்டு தம் தேசியத் தலைவரான ஜே.பி.நட்டாவுக்கு தான் கடிதம் எழுதியிருப்பதாகவும் ஹர்நாத்சிங் தெரிவித்திருந்தார்.

இவருக்கு பதிலளிக்கும் வகையில், மறுநாள் உபியின் முன்னாள் முதல்வரான அகிலேஷ் சிங் யாதவும் ஒரு அறிக்கையை வெளியிட்டார். உபியின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான அகிலேஷ்சிங், ‘தனது கனவில் வந்த கிருஷ்ணர், உபி தேர்தலில் தமது சமாஜ்வாதியின் ஆட்சி அமையும்‘ எனக் கிருஷ்ணர் கூறியதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதுபோல், கிருஷ்ணரை சாட்சிக்கு இழுப்பவர்கள் கூறுவது உண்மையா பொய்யா என்பது உறுதியில்லை எனினும், இப்பிரச்சினையை மையமாக வைத்து உபியில் ஆன்மிக அரசியல் உச்சத்தை எட்டிவிட்டது. சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்சிங் கூறுவதை மறுத்து, அவருக்கு உடனடியாகப் பதில் அளித்தார் உபி முதல்வர் யோகி.

‘தன் கனவில் கிருஷ்ணர் வந்ததாக லக்னோவில் கூறும் சிலர், தமது தோல்விகளை சற்று நினைவுகூர்வது அவசியம். அகிலேஷின் கனவில் வந்த கிருஷ்ணர் அவரை சபித்திருப்பார். தவறு செய்த தனது மாமன் கம்ஸனையும் விட்டு வைக்காதவர் கிருஷ்ணர் என்பதை அனைவரும் அறிவர்’ என தனது அறிக்கையில் தெரிவித்தார்.

இதையடுத்து, கிருஷ்ணரிடமிருந்து ஆன்மிக அரசியல் அயோத்தி ராமரிடம் தாவியது. ஜன.9-ம் தேதி தேர்தல் பிரச்சாரத்துக்காக அயோத்தி செல்லும் அகிலேஷ், அங்கு ராமர் கோயிலையும் தரிசிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாயின. முதன்முறையாக அவரது ராமர் கோயிலுக்கான இந்த விஜயம் குறித்து மீண்டும் பாஜக கருத்து வெளியிட்டது.

ஆதரவாளர்களுடன் அகிலேஷ் சிங் யாதவ்
ஆதரவாளர்களுடன் அகிலேஷ் சிங் யாதவ்

இதுகுறித்து உபி பாஜகவின் மூத்த தலைவர்கள், ‘அயோத்தியில் ராமர் கோயிலை தரிசிக்க அகிலேஷ் செல்லவில்லை எனில் அது சர்ச்சைக்குள்ளாகும். ஏனெனில், அவரது தந்தை முலாயம்சிங் யாதவ் உபி முதல்வராக இருந்தபோது, அயோத்தியில் கரசேவகர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டிருந்தவர்’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

தனது பங்குக்கு உபி முதல்வர் யோகி, அகிலேஷின் பெயரைக் குறிப்பிடாமல், ‘‘சிலருக்கு தேர்தல் சமயங்களில் ராமர் மற்றும் கிருஷ்ணர் கடவுள்களின் ஞாபகம் வந்துவிடுகிறது. இதுபோல், நிறம் மாறுவதற்கு அவர்கள் சிறிதும் வெட்கப்படுவதில்லை’’ எனத் தெரிவித்தார்.

இப்பிரச்சினையில், அகிலேஷின் கட்சி ஆட்சிக்கு வந்தால், அயோத்தியில் ராமர் கோயில் பணிகளை நிறுத்திவிடும் வாய்ப்புகளும் உள்ளதாக பாஜகவினரால் ஒரு தகவல் பரப்பப்படுகிறது. இதற்கு பதிலளிக்கும் வகையில் சமாஜ்வாதி கட்சியினரும் தம் பங்குக்கு சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிடுகின்றனர். அதில், சில ஆண்டுகளுக்கு முன் உபியிலேயே உயரமான கிருஷ்ணர் சிலையை, தமது சொந்த கிராமமான சிபையில் வைக்கப் போவதாக அகிலேஷ்சிங் கூறியதையும் நினைவுபடுத்தி உள்ளனர்.

அயோத்தியில் பல வருடங்களாக நடைபெற்ற நிலப்பிரச்சினை மீதான வழக்கு, கடந்த 2019 நவம்பரில் முடிவுக்கு வந்தது. இதன்பிறகும் உபியில் ராமர் மீதான அரசியல் முடிவுக்கு வராமல் தொடர்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in