‘உலகை சூழும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் புதிய சவால்களை எதிர்கொள்ளத் தயாராகுமாறு’ இந்திய விமானப்படையினருக்கு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், இந்திய விமானப்படையின் உயர்மட்டத் தளபதிகள் அடங்கிய முக்கிய கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், ’வேகமாக மாறிவரும் உலகளாவிய புவி அரசியல் நிலைமையை ஆராயவும், இந்தியச் சூழலில் அவற்றை மதிப்பிடவும், அவற்றுக்கு ஏற்றவாறு புதிய சவால்களுக்கு தயாராகும்படியும்’ அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தினார்.
இந்திய விமானப்படை தளபதிகளுக்கான இந்த 2 நாள் மாநாட்டில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், ”இந்தியாவின் வான் பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்துதல் மற்றும் நவீன ட்ரோன்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். வான்வழி போர் உத்திகளில் உலகளவில் மாறும் போக்கிற்கு ஏற்ப இந்தியாவும் மாற வேண்டியது அவசியமாகிறது. உலகளாவிய நடப்பு பாதுகாப்பு சூழ்நிலையில் தலைகாட்டும் புதிய சவால்களை எதிர்கொள்ளவும் நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
நாட்டின் பாதுகாப்புக்கு அப்பால் இமாச்சல பிரதேசம், சிக்கிம் மற்றும் இதர வெள்ளம் பாதித்த பகுதிகளில், இந்திய விமானப்படையினர் அண்மையில் மேற்கொண்ட மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண பணிகளுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.
தொடர்ந்து ஹமாஸ் - இஸ்ரேல் மற்றும் ரஷ்யா - உக்ரைன் போர்களில் வெளிப்படும், வான்வழி போர் உத்திகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படுவது தொடர்பாக விமானப்படை தளபதிகள் விவரித்தனர். சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் உள்ள பாதுகாப்பு நிலைமை குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படுவதை விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி விவரித்தார். பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
இதையும் வாசிக்கலாமே...
முன்னாள் பிரதமர் மாரடைப்பால் மரணம்... சோகத்தில் நாட்டு மக்கள்!
அதிர்ச்சி... சேலம் ஆர் ஆர் பிரியாணி கடைக்கு பூட்டு போட்ட அதிகாரிகள்!
மகன் சாவில் மர்மம்... கண்டுகொள்ளாத போலீஸ்; வேதனையில் தாய், மகள் தற்கொலை
நாளை சந்திர கிரகணம்... குரு சந்திர யோகமும்... ராசிகளின் கூட்டணியும்!
இஸ்ரேல் குண்டுவீச்சில் குடும்பமே பலி... அடுத்த நாளே போர்க்களத்தில் களமிறங்கிய செய்தியாளர்!