திட்டங்கள் திடமானவையாக இருக்கட்டும்!

திட்டங்கள் திடமானவையாக இருக்கட்டும்!

ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலோட் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி செய்கிறது. 2018 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, படித்துவிட்டு வேலை கிடைக்காத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் அறிவித்தது. அறிவித்தபடியே கடந்த 3 ஆண்டுகளாக அமல்படுத்தி வருகிறது. இதற்காகக் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.800 கோடியை அது செலவிட்டிருக்கிறது. இப்போது அந்த உதவித் தொகையை இளைஞர்களுக்கு ரூ.3,500-லிருந்து ரூ.4,000 ஆகவும், இளம் பெண்களுக்கு ரூ.4,000-லிருந்து ரூ.4,500 ஆகவும் உயர்த்தி 2022 ஜனவரி 1 முதல் வழங்க முடிவு செய்திருக்கிறது.

இதுவரையில் சரி, இனிதான் வரலாற்றை நினைவூட்டும் நடவடிக்கை வருகிறது. இந்த உதவித் தொகையைப் பெறும் யுவர்களும் யுவதிகளும் இனி உதவித் தொகையை வாங்கிக்கொண்டு வீட்டுக்குப் போய்விடக் கூடாது. அரசு நடத்தும் பயிற்சி நிலையங்களில் புதிதாக ஏதேனும் தொழில் பயிற்சிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். அந்தப் பயிற்சி 3 மாதங்களுக்கு இலவசமாகக் கற்றுத்தரப்படும். அது மட்டுமின்றி ராஜஸ்தான் மாநில அரசின் துறைகளில் ஏதாவதொன்றில், தேவைப்படும் வேலைகளைச் செய்துதர வேண்டும். அது அன்றாடம் 4 மணி நேர வேலையாக இருக்கும். அரசின் துறைகளிலோ, அரசின் திட்டங்களிலோ பணிபுரிய வேண்டும். இந்தப் பயிற்சியை மேற்கொள்ள விரும்பாதவர்களுக்கும் அரசுத் துறையில் வேலை செய்ய விருப்பமில்லாதவர்களுக்கும் உதவித் தொகை நிறுத்தப்படும். ராஜஸ்தான் அரசின் இந்த உத்தரவு அம்மாநிலத்தின் இளம் தலைமுறையினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரிட்டன் உதாரணம்

உலக ஜனநாயகத்துக்கே வழிகாட்டி என்றும் மக்கள் நல திட்டங்களின் முன்னோடி என்றும் கருதப்படும் பிரிட்டனிலும் 19-வது நூற்றாண்டில் கிட்டத்தட்ட இதேபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தொழில் புரட்சி காரணமாக பிரிட்டனில் மக்களுடைய சமுதாய வாழ்க்கை தடம் புரண்டது. புதிதாக தொழில் தொடங்கிய முதலாளிகள் தங்களுடைய நிறுவனத்தின் விற்பனை, லாபம் ஆகியவை பற்றி மட்டுமே கவலைப்பட்டார்கள். தொழிற்சாலைகளில் வேலை தேடி கிராமங்களிலிருந்து வந்த ஏழைகள் மிகவும் குறைந்த கூலிக்கு வேலைக்கு அமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு வேலையில் பயிற்சி தரும் பொறுப்பையும் நிறுவனங்களே ஏற்றன. ஆனால் தொழிலாளர்கள் தங்குவதற்கான இடம், உணவு, போய்வருவதற்கான போக்குவரத்து வசதி போன்றவற்றை அவரவர்களே செய்துகொள்ள வேண்டியிருந்தது. இதனால் நகரங்களில் ஏழைகள் வசிக்கும் புதிய குடியிருப்புகள் உருவாகின. பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிவுநீர் வெளியேற வசதி, குப்பைகள் அகற்றப்படுவது, தெருவிளக்கு, நல்ல தரமான சாலை, குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள மையம், பள்ளிக்கூடம் என்று எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் அவை நகரத்தின் ‘நரகங்களாகவே’ இருந்தன. கடும் குளிர், நோய்களின் பாதிப்பு, கொசுத்தொல்லை, குடிகாரர்களின் வம்புச்சண்டை இவற்றுக்கிடையே ஏழைகள் அங்கே வாழ வேண்டியிருந்தது.

அதே சமயம், சமுதாய ஒழுக்கமும் சீர்கெட்டது. குடிப்பழக்கமும் சூதாட்டமும் அனைவரையும் பீடித்தது. பாலியல் தொழில் பெருகியது. புதிய புதிய வழிகளில் மக்களை ஏய்க்கும் தொழில்களும், சமூகவிரோதிகளும் தோன்றினர். நகரங்கள் சமூகவிரோதிகளுக்குப் புகலிடமாக மாறியது. ஏழைகள், பிச்சைக்காரர்கள், மனநலம் குன்றியவர்கள், சமூக விரோதிகளின் எண்ணிக்கை அதிகமாவது கண்டு நடுத்தர வர்க்கத்தினரும் பணக்காரர்களும் அச்சமுற்றனர். இந்த நிலையிலிருந்து விடுபட அரசு ஏதாவது செய்தாக வேண்டும் என்று வலியுறுத்தினர். அரசியல் கட்சிகளும் இதைச் சிந்தித்தன. அதையடுத்தே ஏழைகளைக் காப்பதற்கான சமூகநலத் திட்டங்களும் சட்டங்களும் உருவாகின.

ஏழைகளுக்காக ஒரு சட்டம்

நகர வீதிகளிலிருந்து பிச்சைக்காரர்களை அகற்றவும், ஏழைகளைப் பராமரிக்கும் செலவை அரசின் தோள்களிலிருந்து குறைக்கவும், சமுதாயத்துக்குப் பயனுள்ள வகையில் ஏழைகளும் அநாதைகளும் வேலைசெய்யவும் 1834-ல் ஏழைகள் (மறுவாழ்வு) சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி ஆங்காங்கே தொழில்மனைகள் உருவாக்கப்பட்டன. ஏழைகளுக்கு அங்கே சீருடையும் உணவும் தந்து வேலையும் தந்தனர். வேலைக்குக் கூலி என்பது மிகமிகக் குறைவு என்பது சொல்லாமலே விளங்கியிருக்கும். அத்துடன் அங்கே தொழிலாளர்களின் பணிகளைக் கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டவர்கள் கல்லில் நார் உரிக்கும் அளவுக்குக் கைதேர்ந்த அனுபவஸ்தர்கள். அவர்களுடைய குரூரமான பார்வையும் ஏகவசன பேச்சுகளும் அச்சுறுத்த அவர்கள் கையாண்ட தண்டனை முறைகளும் ஏழைகளை மேலும் துயரத்துக்குள்ளாக்கின. ஆனால் அவர்களைப் பற்றிய புகார்கள் அரசு மட்டத்தில் காதில் போட்டுக் கொள்ளப்படவே இல்லை. அன்றாடம் இத்தனை மணி நேர வேலை என்ற வரையறை கூட இல்லாமல், உற்பத்தி முடியும்வரை வேலை செய்யும்படி நிர்பந்திக்கப்பட்டனர்.

ஏழைகளின் சிறைக்கூடங்கள்

அரசு ஏற்படுத்தியிருப்பது தொழில்மனைகள் அல்ல, ஏழைகளுக்கான கட்டாய வேலைச் சிறைக் கூடங்கள். அங்கே அவர்களுக்கு வேலை என்ற பெயரில் தண்டனைகளே தரப்படுகின்றன என்று பலரும் கண்டித்தனர். ஏழைகளிலேயே உடலில் தெம்புள்ளவர்கள் இந்த மனைகளில் வேலை செய்ய மறுத்தனர். வன்முறைகளில் இறங்கினர், கலவரம் செய்தனர். பிரிட்டனின் வடக்கிலிருந்த நகரங்களில் கலகம் பரவத் தொடங்கியது. இதையடுத்தே இதில் பல மாறுதல்கள் செய்யப்பட்டன. சில ஆண்டுகள் கழிந்த பிறகு, அரசில் இருப்பவர்களே இது சரியில்லை என்ற முடிவுக்கு வந்து சீர்திருத்தங்களை மேற்கொண்டனர்.

ஆனால், இந்தச் சீர்திருத்தத்துக்கும் முன்னால் மிகவும் கனிவான உள்ளத்தோடு அரசு பல ஏழைகளுக்கான தங்குமிடங்களைத் திறந்தது. அங்கே ஏழைகள் வந்து தங்கி 3 வேளையும் சாப்பிடலாம், ஓய்வெடுக்கலாம், எவ்வளவு நாள் வேண்டுமானாலும் இருக்கலாம் என்றெல்லாம் தாரளமாக அனுமதித்தது. அதற்குப் பிறகு பல தொழிற்சாலைகளுக்குத் தொழிலாளர்கள் வருவது படிப்படியாக குறைந்தது. தொழிலதிபர்கள் வியப்படைந்து, நம்மைவிட அதிக சம்பளம் தரும் தொழில் எது, தொழிலதிபர் யார் என்று ஊரெங்கும் தேடினர். தங்களுடைய நிறுவன ஊழியர்கள் எல்லாம் ஏழைகளுக்கான இல்லங்களில் வந்து 3 வேளையும் சாப்பிட்டு தூங்கி நிம்மதியாகக் காலம் கழிப்பதைப் பார்த்து வெகுண்டு அரசிடம் பொருமினர். மக்களுடைய வரிப்பணம் இப்படி தண்டமாகச் செலவாகிறது அத்துடன் சோம்பேறிகளை நாம் வளர்த்துக் கொண்டிருக்கிறோம், இது என்ன நல்வாழ்வுத் திட்டம் என்று கூச்சல் போட்டனர். முதலாளிகளுக்குத்தான் ஏழைகள்மீது எவ்வளவு கரிசனம்!

அதன் பிறகு, ஏழைகளுக்கான இல்லங்களுக்கு வருகிறவர்களில் உடலில் தெம்புள்ளவர்கள், அரசு தரும் வேலைகளைச் செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. அதன் பிறகு உண்மையிலேயே பிச்சைக்காரர்கள், உடல் நலிவுற்றவர்கள், மனநிலை சரியில்லாதவர்கள் மட்டுமே அங்கிருந்தனர். மற்றவர்கள் பழையபடி ஆலைகளில் வேலைக்குத் திரும்பிவிட்டனர்.

அரசு நல்வாழ்வு திட்டங்களைக் கொண்டுவருவதில் தவறில்லை, அதை நிறுத்தவும் வேண்டியதில்லை. எந்தத் திட்டமாக இருந்தாலும் அது சமுதாயத்துக்கும் பயன்தரும் வகையில் இருக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டம் என்று அழைக்கப்படும் வேலைவாய்ப்பு உறுதி திட்டம், ஆரம்ப கட்டத்தில் முறையாக திட்டமிடப்படாமல் பலருடைய விமர்சனங்களுக்கும் ஆளானது. நல்வாழ்வுத் திட்டங்கள் பெரும்பாலும் நிதி விரயத்தைத்தான் ஏற்படுத்தும். அதற்காக அவற்றிலிருந்து அரசுகள் பின்வாங்கிவிடக் கூடாது.

வறிய நிலையில் இருக்கும் மக்களின் வாழ்க்கைக்கு உதவும் திட்டங்கள் முழுப் பலனைத்தராமல் வீணாகவும் முறையின்றியும் போவதற்குக் காரணம், அதை அமல்படுத்தும் அதிகார வர்க்கம். ஐந்து ஆண்டுகளுக்கொருமுறை தேர்தலைச் சந்திக்க வேண்டிய அவசியமில்லாதவர்கள் அதிகாரிகள். அவர்களைச் சரியாக வழிநடத்தாவிட்டால், நல்ல திட்டங்களைக்கூட அக்கறையின்றிச் செயல்படுத்தி கெடுத்துவிடுவார்கள். (தமிழ்நாடு விதிவிலக்கு!)

ராஜஸ்தான் மாநிலம் மட்டுமல்ல, எல்லா மாநிலங்களுமே தாங்கள் கொண்டுவந்துள்ள நலத் திட்டங்கள் எப்படிப் பலன் தருகின்றன என்று ஆராய்ந்து, குறைகளை அவ்வப்போது சரி செய்ய வேண்டும். திட்டங்களை உருவாக்கும்போதே அவற்றின் மூலம் சாதகமான விளைவுகள் ஏற்படுமா என்பதை உறுதிசெய்துகொள்வது மிக அவசியம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in