‘ராகுல் காந்தியைத் தலைவராக்குக!’ - ராஜஸ்தான் காங்கிரஸ் ஏகமனதாகத் தீர்மானம்

‘ராகுல் காந்தியைத் தலைவராக்குக!’ - ராஜஸ்தான் காங்கிரஸ் ஏகமனதாகத் தீர்மானம்

காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் ராகுல் காந்தியை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸார் தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றனர்.

2017-ல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி, போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். எனினும், 2019 மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியிலிருந்து அவர் விலகினார். அதன் பின்னர் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி பதவிவகித்துவருகிறார். கட்சியின் தலைமையில் ஸ்திரத்தன்மை இல்லாததால்தான் தொடர்ந்து தோல்வி ஏற்படுவதாகக் கூறி, ஜி-23 தலைவர்கள் தலைமைக்குப் பகிரங்கக் கடிதம் எழுதி பரபரப்பை ஏற்றினர். தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், கட்சித் தலைவருக்கான தேர்தல் அக்டோபர் 17-ல் நடத்தப்படும் என கட்சியின் செயற்குழு அறிவித்தது. அக்டோபர் 19-ல் தேர்தல் முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று நடந்த மாநில காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில், ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக நியமிக்க வேண்டும் எனும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், அமைச்சர் பிரதாப் சிங் கச்சாரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் தற்போது டெல்லியில் இருப்பதால் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இதன் மூலம் ராகுல் காங்கிரஸ் தலைவராக வேண்டும் எனத் தீர்மானமே நிறைவேற்றியிருக்கும் முதல் மாநிலமாகியிருக்கிறது ராஜஸ்தான். செப்டம்பர் 24 முதல் மனுத்தாக்கல் தொடங்குகிறது. 30-ம் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். அக்டோபர் 8-ம் தேதி வேட்புமனுவைத் திரும்பப் பெற இறுதி நாள்.

அசோக் கெலாட்
அசோக் கெலாட்

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கட்சித் தலைவராக வர வேண்டும் என காங்கிரஸ் தலைமை விரும்புவதாகச் செய்திகள் வெளியான நிலையில், அவர் தலைமையில் ராஜஸ்தான் காங்கிரஸார் ராகுலைத் தலைவராக்க தீர்மானம் நிறைவேற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்ததும் அசோக் கெலாட் தான்.

இதற்கிடையே, ராகுல் காந்தி மீண்டும் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் எனக் கட்சியின் பல்வேறு தலைவர்கள் வலியுறுத்திவருகின்றனர், எனினும், தலைவர் பதவியை ஏற்கப்போவதில்லை என ராகுல் காந்தி பிடிவாதமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in