ராஜஸ்தான் முதல்வரின் சிறப்பு அதிகாரி இரவோடு இரவாக ராஜினாமா
அசோக் கெலாட்டுடன் லோகேஷ் சர்மா

ராஜஸ்தான் முதல்வரின் சிறப்பு அதிகாரி இரவோடு இரவாக ராஜினாமா

பஞ்சாப் விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையை விமர்சித்து ட்வீட் செய்தவர்

பஞ்சாப் அரசியல் குழப்பம் தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்த ராஜஸ்தான் முதல்வரின் சிறப்பு அதிகாரி லோகேஷ் சர்மா, கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் நேற்று (செப்.19) இரவு பதவி விலகினார்.

பஞ்சாப் முதல்வர் பதவியிலிருந்து கேப்டன் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்ததையடுத்து, அவரை எதிர்த்து அரசியல் செய்துவந்த பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து புதிய முதல்வராவாரா என்று எதிர்பார்ப்புகள் எழுந்தன. சுனில் ஜாகர், சுக்ஜிந்தர் ரந்தாவா, பிரதாப் பாஜ்வா போன்றோரின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டன. இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் புதிய முதல்வராக சரண்ஜீத் சிங் சன்னி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இதற்கிடையே, “பலமானவர் - பலவீனமாக்கப்படுகிறார், தகுதியே இல்லாதவர் - தலைக்குமேல் தூக்கி வைத்துக் கொண்டாடப்படுகிறார்” என்று கேப்டன் அமரீந்தர் சிங்கையும் பஞ்சாப் மாநில பிரதேச காங்கிரஸ் தலைவரான நவஜோத் சிங் சித்துவையும் ஒப்பிட்டு ட்விட்டரில் நேற்று (செப்.19) மாலை கருத்து வெளியிட்டார் லோகேஷ் சர்மா.

பஞ்சாப் அரசியல் மாற்றங்கள் தொடர்பாகத் தெரிவித்த கருத்துகள் காங்கிரஸ் கட்சியின் தலைமையை (சோனியா காந்தி) விமர்சிப்பதாகக் கண்டனங்கள் எழுந்த நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்குத் தர்மசங்கடம் ஏற்படாமலிருக்கப் பதவி விலகிவிட்டார் லோகேஷ் சர்மா.

மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிலர், கட்சி மாறுவதற்காக பேரம் பேசுவதாக சில காணொலிக் காட்சிகள் சில மாதங்களுக்கு முன்னால் வெளியாகின. ஷெகாவத் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரின. அது குறித்து விசாரணை வேண்டும் என்றும் கேட்கப்பட்டது. அந்த ஒலி-ஒளி நாடாக்களை வெளியிட்டது லோகேஷ் சர்மா தான் என்று கூறி, அவர் மீது டெல்லி காவல் துறை சார்பில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.