‘பாகிஸ்தான் கலைஞர்கள் பாலிவுட்டில் இறக்குமதியானால் விரும்பத்தகாதவை விளையும்..’

ராஜ் தாக்கரே கட்சி ரௌத்ரம்
ராஜ் தாக்கரே
ராஜ் தாக்கரே

பாலிவுட் சினிமாவுக்கான கலைஞர்கள் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டால் விரும்பத்தகாதவை விளையும்’ என்று மிரட்டல் விடுத்திருக்கிறது, ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மான் கட்சி.

’மராட்டியம் மராட்டியருக்கே’ என்பது உள்ளிட்ட எதிர்ப்பு முழக்கங்களில் வளர்ந்தவர்கள் பாலா சாகேப் தாக்கரே வழி வந்தவர்கள். மும்பை வாழ் தமிழர்கள் உட்பட அயல் மாநிலத்தவருக்கு எதிராக வன்முறைகளை கையில் எடுத்ததில், சிவசேனா கட்சியும் அதற்கான ஓட்டு வங்கியும் விருத்தியடைந்தது வரலாறு. தாக்கரே காலத்துக்குப் பின்னர் அவரது மகன் மற்றும் மருமகன் என தாக்கரே ஆதரவாளர்கள் பிரிந்தனர்.

பாலா சாகேப் தாக்கரே
பாலா சாகேப் தாக்கரே

தாக்கரே மகன் உத்தவ் தலைமையில் சிவ சேனா தனி சிறப்பு பெற்றது. மருமகன் ராஜ் தாக்கரே ’மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா’ என்று புதிய கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கப்பட்டதன் நோக்கங்களில் இருந்து சிவ சேனா வழுவி வருவதாக ராஜ் தாக்கரே கட்சியினர் தொடர்ந்து குற்றம் சுமத்துவார்கள். கேட்பாரற்ற அந்த சிவ சேனா கொள்கைகளை அவ்வப்போது கைக்கொண்டு கவனம் ஈர்க்கவும் செய்வார்கள்.

உத்தவ் தாக்கரேயின் சிவ சேனா தலைமையிலான கூட்டணி மகாராஷ்டிராவை ஆண்டு வந்ததில் ராஜ் தாக்கரேயின் கட்சி அடக்கி வாசித்தது. பாஜக அரசியல் சித்து விளையாட்டில் சிக்குண்டு கட்சியின் பெரும் எம்எல்ஏக்களை பறிகொடுத்து, கட்சி சின்னமும் முடங்கிப்போய் கையறு நிலையில் தற்போது நிற்கிறது சிவ சேனா. இந்த சூழலை பயன்படுத்தி ராஜ் தாக்கரேயின் நவநிர்மான் தனது அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறது. தாக்கரே காலத்து கொள்கைகள் பலவற்றுக்கும் முலாம் பூசி களம் இறங்கியிருக்கிறது.

அந்த வகையில் பாலிவுட் சினிமாவில் பாகிஸ்தான் தேசத்தை சேர்ந்த நடிகர்கள் மற்றும் கலைஞர்களின் பங்களிப்புக்கு மகாராஷ்டிர நவநிர்மான் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இந்த இறக்குமதி போக்கு இனியும் தொடர்ந்தால் நடப்பதே வேறு என்றும் அச்சுறுத்துகிறது எடுத்திருக்கிறது. இம்ரான் அப்பாஸ்ச், மஹிரா கான், ஹூமைமா மாலிக், ஃபவத் கான், அலி சஃபார், வீனா மாலிக் என ஏராளமான நடிகர் நடிகையர் மற்றும் திரைக்கலைஞர்கள் பாலிவுட் மற்றும் இதர இந்திய சினிமாக்களில் பங்கெடுத்து வருகின்றனர்.

இம்ரான் அப்பாஸ்
இம்ரான் அப்பாஸ்

பாகிஸ்தான் கலைஞர்களை இறக்குமதி செய்வதில், பாலிவுட்டுக்கும் தனி கணக்கு இருக்கிறது. இந்தி திரைப்படங்களுக்கு பாகிஸ்தான் தேசத்தில் விரிந்திருக்கும் சந்தை இவற்றில் முதலாவது. பாகிஸ்தான் நடிகர்கள் பங்கெடுக்கும்போது இந்த சந்தையின் மதிப்பும் அதிகமாகும். ஆனால் ராஜ் தாக்கரே கட்சி வாயிலாக இதற்கு முட்டுக்கட்டை எழுந்திருக்கிறது.

இதற்கு முன்னதாக புல்வாமா பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பாகிஸ்தான் கலைஞர்களின் இந்திய திரையுலக பிரவேசத்துக்கு ’அகில இந்திய சினிமா பணியாளர்கள் சங்கம்’ அதிகாரபூர்வ தடை விதித்திருந்தது. பதிலடியாக பாகிஸ்தான் தேசமும், தங்களை வில்லனாக முன்னிருத்தும் இந்தி திரைப்படங்களுக்கு தடைகளை விதித்திருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in