‘குஜராத்தில் பாஜகவுக்கு நிலவரம் சரியில்லை போலும்!’

பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என அறிவித்த குஜராத் அரசை விமர்சிக்கும் மாயாவதி
‘குஜராத்தில் பாஜகவுக்கு நிலவரம் சரியில்லை போலும்!’

பொது சிவில் சட்டம் அமல்படுத்துவதற்கான சாதகமான அம்சங்கள் ஆராயப்படும் என குஜராத் அரசு அறிவித்திருக்கும் நிலையில், பாஜகவின் நிலை சாதகமாக இல்லை என்பதால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித்திருக்கிறார்.

குஜராத் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என அம்மாநில உள் துறை அமைச்சர் ஹர்ஷ் சங்க்வி நேற்று தெரிவித்தார். பிரதமர் மோடி, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ஆகியோர் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், இதுதொடர்பாக ட்வீட் செய்திருக்கும் மாயாவதி, ‘உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தலுக்கு முன்னதாக வேலைவாய்ப்பு, வளர்ச்சி போன்ற பிரச்சினைகளைப் பேசுவதற்குப் பதிலாக, பொது சிவில் சட்டம் அல்லது அதுபோன்ற பிரிவினைவாத விஷயங்கள் பெரிதுபடுத்தப்படும் என்பது அறிந்த விஷயம்தான். ஆனால், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, பொது சிவில் சட்டம் பேசுபொருளாகியிருப்பதைப் பார்க்கும்போது அம்மாநிலத்தில் பாஜக நல்ல நிலைமையில் இல்லை எனும் எண்ணம் வலுவடைகிறது’ என அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், ‘பொது சிவில் சட்டத்தை 22-வது சட்ட ஆணையத்துக்கு அனுப்பவிருப்பதால், அது குறித்து முடிவு எடுக்க வேண்டாம் என்று உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசே சமீபத்தில் கோரிக்கை விடுத்திருக்கிறது. இந்தச் சூழலில், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் அந்த விஷயம் என்னவாகும்?’ என்றும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in