உயர்த்தப்பட்ட புது சொத்து வரி வசூல் தொடங்கியது: கூடுதல் வருவாயை குவிக்கும் மதுரை மாநகராட்சி!

உயர்த்தப்பட்ட புது சொத்து வரி வசூல் தொடங்கியது: கூடுதல் வருவாயை குவிக்கும் மதுரை மாநகராட்சி!

மதுரை மாநகராட்சியில் புதிதாக உயர்த்தப்பட்ட சொத்து வரி வசூல் இன்று முதல் தொடங்கியது. முதல் நாளே ரூ.26 லட்சம் சொத்து வரி வசூலாகியுள்ளது. மாநகராட்சிக்கு இனி ஆண்டுதோறும் சொத்து வரி மூலம் மட்டுமே ரூ.87 கோடி வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.

மதுரை மாநகராட்சிக்கு சொத்து வரி, தொழில் வரி, பாதாளசாக்கடை வரி, குடிநீர் வரி, கடைகள் வாடகை மற்றும் குத்தகை வருவாய் இனங்கள் ஏலம் போன்ற பல்வேறு வருவாய் இனங்கள் மூலம் வருவாய் கிடைக்கிறது. இதில் சொத்து வரி மூலம் மட்டும் மாநகராட்சிக்கு இதுவரை ஆண்டிற்கு 100 கோடி வருவாய் கிடைத்து வந்தது. சமீப காலமாக தொடர் தேர்தல்களால் வாக்கு வங்கிக்காக கறார் வரி வசூலுக்கு ஆளும்கட்சியாக இருப்பவர்கள் தேர்தல் முட்டுக்கட்டை போட்டதால் மாநகராட்சியால் முழுமையாக வரிவசூல் செய்ய முடியவில்லை. பெரும் பாக்கி இருப்பவர்கள் அரசியல் கட்சிகளுடன் நெருக்கம் காட்டிக் கொண்டு நிரந்தரமாக வரி செலுத்தாமல் தப்பித்து வந்தனர். அதனால், மதுரை மாநகராட்சியில் ஒரு ஆண்டிற்கு முன் ஊழியர்களுக்கு ஊதியம் போடுவதிலே சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் மாநகராட்சி ஆணையாளராக இருந்த கார்த்திகேயன், அவருக்கு பின் தற்போது வந்த சிம்ரன் ஜித் சிங் ஆகியோர் ஆளும்கட்சியினரின் குடைச்சலையும் மீறி வரி வசூலை தீவிரப்படுத்தினர். அதனால், தற்போது வெறும் 20 சதவீதம் மட்டுமே இன்னும் நிலுவை வரி பாக்கியுள்ளது. நிதி நெருக்கடியில் இருந்து மாநகராட்சியும் ஓரளவு மீண்டுள்ளது. தற்போது சொத்து வரி உயர்த்தப்பட்டதால் 600 சதுர அடி உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 25 சதவீதம் சொத்து வரியும், 601 முதல் 1200 சதுர அடி உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதமும், 1800 சதுர அடிக்கு அதிகமாக உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், வணிக நிறுவனங்களுக்கும், வணிகப் பயன்பாட்டு கட்டிடங்களுக்கும் 100 சதவீதமும் வரி அதிகரித்துள்ளது. இந்த வரி உயர்வு கடந்த ஏப்ரல் மாதம் முதல் அமுலுக்கு வந்தது. ஆனால், இந்த வரி உயர்வை சாப்ட்வேரில் மாநகராட்சி அப்டேட் செய்வதில் நீண்ட தாமதம் செய்ததால் புதிதாக உயர்த்தப்பட்ட வரியை வசூல் செய்ய முடியவில்லை. அதனால், நிலுவை வரியை மட்டும் நேற்று வரை வசூல் செய்து கொண்டிருந்தனர்.

தற்போது சாப்ட்வேரில் அப்லோடு செய்துவிட்டதால் இன்று முதல் உயர்த்தப்பட்ட புதிய சொத்து வரி வசூல் செய்யும் பணி அனைத்து வரி வசூல் மையங்களிலும் தொடங்கியது. இன்று முதல் புதிய வரியை மக்கள் ஆர்வமாக செலுத்தத்தொடங்கினர். முதல் நாளே இன்று ரூ.26 லட்சத்திற்கு உயர்த்தப்பட்ட புதிய சொத்து வரி வசூலாகியுள்ளது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘மாநகராட்சிக்கு சொத்து வரி இதுவரை 100 கோடி மட்டுமே வசூலானது. தற்போது வரி உயர்த்தப்பட்டதால் கூடுதலாக 87 கோடி வருவாய் கிடைக்கும். வருவாய் அதிகரிப்பு காரணமாக மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள், வருவாய் இனங்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளது’’ என்றனர்.

உயர்த்தப்பட்ட புதிய சொத்து வரி வசூல் செய்யப்படும் நிலையில் புதிய கட்டிடங்களுக்கான வரி நிர்ணயம் இன்னும் தொடங்கவில்லை. அதனால், புதிதாக வீடு உள்ளிட்ட பல்வகை கட்டிடம் கட்டியவர்கள் வரி நிர்ணயம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக கட்டிய கட்டிடத்திற்கு தற்போது தற்காலிக அடிப்படையில் மின்இணைப்பு வாங்கியிருப்பார்கள். அவர் வீட்டு இணைப்பாக மாற்ற இயலாது. அதனால், கூடுதல் மின் கட்டணம் கட்டிகொண்டு இருக்கிறார்கள். முகவரி உள்ளிட்ட அடையாள ஆவணங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. மொத்தமாக கட்டும்போது நிதி சுமையும் ஏற்படும். மாநகராட்சி அங்கீகாரம் செய்து வரி நிர்ணயம் செய்யாததால்தான் பாதாள சாக்கடை, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட மாநகராட்சியின் அடிப்படை வசதிகளை பெற முடியும். இந்த வசதிகளை பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மறுசீரமைப்பில் வார்டுகள் மாறியுள்ளது. முன்பு ஒரே வார்டில் உள்ள குடியிருப்புகள் தற்போது 3 வார்டுகளுக்கு மாறியுள்ளன. மண்டல அலுவலகம் முன்பு நான்கு மட்டுமே இருந்தன. தற்போது அவை ஐந்தாக மாறியுள்ளது. அதனால், வார்டுகளை முறைப்படுத்தி மண்டலம் அடிப்படையில் புதிய கட்டிடங்களுக்கு வரி நிர்ணயம் செய்வதற்கு ஏற்பாடுகள் நடக்கிறது’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in