‘ஹலோ’ சொல்லாதவங்க இருந்தா... கைதூக்குங்க!

உலக ஹலோ தின சிறப்புக் கட்டுரை

‘ஹலோ’ சொல்லாதவங்க இருந்தா... கைதூக்குங்க!

80-களிலும் 90-களிலும் தொலைபேசி எல்லா வீடுகளுக்குள்ளேயும் வந்து உட்காரவில்லை. டி.வி கூட முக்கியத்தேவை என்றாகிவிட்டிருந்தது. டி.வி இருக்கும் வீடுகளை ஆன்டெனாக்கள் மூலம் அறிந்துகொள்ளலாம். ஒரு தெருவில் இருபது வீடுகள் இருந்தால், அதில் இரண்டு மூன்று வீட்டில் தொலைபேசி இருந்தாலே ஆச்சரியம்தான்; அதிசயம்தான். “நாலு வீடு தள்ளி இருக்கற சரவணன் அம்மா வசந்தியைக் கூப்பிடமுடியுமா? நாங்க மதுரைலேருந்து பேசுறோம். வசந்தியோட பெரியம்மா பொண்ணு நான்’’ என்று சொல்லிவிட்டு, ‘கட்’ செய்துவிடுவார்கள். பிறகு ஐந்துநிமிடம் கழித்து திரும்பவும் அழைப்பார்கள். “ஹலோ நான் வசந்திதான் பேசுறேன், யாரு பங்கஜமா? நல்லா இருக்கியாடி?” என்று பேச்சும் உறவும் குதுகலமாகப் போகும். இதை பி.பி நம்பர் என்று சொல்லிக்கொள்வார்கள்.

இதன் பின்னர் எஸ்டிடி பூத்கள் முளைத்தன. லோக்கல் கால், எஸ்டிடி கோட் போட்டு வெளியூர் அழைப்பு, ஏன் வெளிநாட்டு அழைப்பு என்றெல்லாம் பேசலாம். முன்னதாக, ரிஸீவரை எடுத்தோமா, டயல் செய்தோமா, பேசினோமா என்றெல்லாம் பேசமுடியாது. ‘காரைக்குடிக்கு ஒரு டிரங்கால் புக் பண்ணனும்’ என்று டெலிபோன் எக்சேஞ்சுக்கு பேசி, டிரங்கால் புக் செய்து, அவர்கள் கனெக்ட் செய்து கொடுத்த பிறகுதான் பேச முடியும்.

குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு, எக்சேஞ்ச்காரர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது நடுவே வந்து, ‘கால் எக்ஸ்டெண்ட் பண்ணனுமா?’ என்றுகூட கேட்பார்கள். ‘திரிசூலம்’ படத்தில் நீண்டகாலம் கழித்து, சிவாஜி காஷ்மீரில் இருந்துகொண்டு, சென்னையில் உள்ள கே.ஆர்.விஜயாவிடம் பேசுவார். உணர்ச்சிப்பெருக்கில் பேசிக்கொண்டே இருக்கும்போது, ‘எக்ஸ்டென்ஷன் ப்ளீஸ்’ என்று கத்திவிட்டு, மீண்டும் அழுதுகொண்டே பேசுவார். கைத்தட்டி ரசித்த காட்சி இது.

“ஹலோ, நாங்க திருச்சிலேருந்து பேசுறோம்” என்று ஒரு பெண்ணோ அல்லது ஆணோ என்று ஒருவர் பேசுவார். ஆனால் ‘பேசுறோம்’ என்று சொல்லுவார். எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் மாற்றுத்திறனாளியான முருகேசன் அண்ணன், எஸ்டிடி பூத் வைத்திருந்தார். மதுரையிலும் திருநெல்வேலியிலும் வேலை பார்த்துக்கொண்டிருந்த தருணத்தில், முருகேசன் கடை போன், அப்பாவின் குரலையும் அம்மாவின் குரலையும் கேட்கவைத்தது. அம்மாவுக்கு ரிஸீவரை எப்படிக் கையாள்வது என்று ஆரம்பத்தில் தெரியாது. காதில் வைக்க வேண்டியதை வாய்க்கு அருகிலும் வாயில் வைத்து பேசவேண்டிய இடத்தை காதிலும் வைத்துக்கொண்டு, “ஹலோ.... ஹல்லோ... ஹல்லோல்லோலோலோலோ... முருகேசா, ஒண்ணுமே கேக்கலியே... பையன் வைச்சிட்டான் போல இருக்கே” என்பதெல்லாம் எனக்கு மட்டுமின்றி பலருக்கும் நடந்திருக்கும்.

வீட்டுக்கு போன் வாங்கி வைப்பது என்பது மிகப்பெரிய ப்ராஸஸ். அப்ளை பண்ண வேண்டும். டெபாசிட் செலுத்த வேண்டும். முக்கியமாக வரிசைப்படி வரும் என்பதால் காத்திருக்க வேண்டும். அரசு அதிகாரிகள், காவலர்கள், மருத்துவர்கள் என்போருக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து, அவர்களுக்கு உடனே போன் கனெக்‌ஷன் கொடுத்துவிடுவார்கள்.

“ஹலோ... டாக்டர் வூடுங்களா... எங்க வூட்டுக்காரருக்கு திடீர்னு தலைசுத்தி மயக்கம் வந்துருச்சுங்க” என்று போன் செய்த அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ‘108’ ஆம்புலன்ஸ் சேவை வசதி இல்லாத காலத்திலும் விரைந்து வந்துவிடுவார்கள் மருத்துவர்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக, போன் நம் அத்தியாவசியங்களில் ஒன்றாகிப் போனது. தந்திக்கு நிகராக, வார்த்தைகளை அனுப்புகிற பேஜர் வந்தது. அதையடுத்து செல்போன்கள் வரத்தொடங்கின. இன்றைக்கு உடலில் ‘செல்’ இல்லாதவர்கள்கூட உண்டு. ஆனால் செல்போன் இல்லாதவர்கள் என எவரும் இல்லை என்றே சொல்லலாம். ‘காசுக்கேத்த பணியாரம்’ என்பது போல விதவிதமான செல்போன்கள் வந்துவிட்டன. நம்பர்களையும் பெயர்களையும் நாலாயிரம் ஐயாயிரம் என்று பதிந்துகொள்ளலாம். மேலும் கால்குலேட்டர் தொடங்கி, சமூக வலைதளங்களும் நுழைந்து, இரண்டரை மணி நேர சினிமாவை செல்போனில் பார்க்கிற அளவுக்கெல்லாம் வந்துவிட்டோம். இன்றைக்கு ‘ஹலோ’ சொல்லாதவர்களே இல்லை. செல்போன் இல்லாதவர்களும் இல்லை. நாம் மட்டுமில்லாமல், உலகத்து மக்களில் பெரும்பாலானோர் போனை எடுத்ததும் சொல்லுகிற முதல் வார்த்தை...’ஹலோ’தான்!

ஷேக்ஸ்பியரின் ‘கோரியோலேனஸ்’ (Coriolanus) எனும் நாடகத்தில் காணப்படும் ஒரு வாக்கியம் IF I FLY, MARCIUS,/HALLOO ME LIKE A HARE என்பது ஆகும். முதன் முதலில் HALLOO என்ற சொல்லைப் பயன்படுத்துகிற நாம் அறிந்த வரலாறு இதுவேயாகும். இந்த நாடகத்தின் காலம் 1608-1609 ஆகலாம். இங்கே இந்தச் சொல்லின் பயன்பாடு வேட்டையில், குறிப்பாக முயல் வேட்டையில், தப்பி ஓடும் வேட்டைப் பிராணியை ‘அதோ!’ என்று சுட்டிக்காட்டப் பயன்பட்டதாகத் தெரிகிறது.

HELLO எனும் சொல்லின் இன்றைய மூலம் என்று அமெரிக்கன் வெப்ஸ்டர் அகராதி கூறுகிறது. HALLOO ன் மூலம் OLD HIGH GERMAN என்றும் சொல்லுகிறார்கள். HALO, HELO ஆகிய இரண்டுமே சமமான சொற்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன. ALLO என்னும் ஃபிரெஞ்சுச் சொல் இன்றைய நிலையில் தொலைபேசி உரையாடலுக்கு என்று மட்டுப்படுத்தப்பட்டதாகவும், 1880-ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் உயிர்பெற்று உலா வந்தது என்றும் குறிப்புகள் இருக்கின்றன. மொழி வல்லுநர்கள் HALO, HELO போன்ற ஜெர்மானியச் சொற்களுக்கும் கூட உண்மையான மூலம் HOLÀ என்னும் ஃபிரெஞ்சுச் சொல் தான் என்கிறார்கள். HOLÀ என்பதனை ’அதோ... அங்கே...’ என்றும் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

உண்மையில் HELLO என்பது ஆங்கிலேயரின் பாவனைச் சொல்லாக இருந்திருக்கிறது. அமெரிக்காவில் 1826-ல் NORWICH COURIER எனும் பத்திரிகையில் இதுகுறித்து எழுதப்பட்டிருக்கிறது. 19-ம் நூற்றண்டின் முற்பகுதியில் அமெரிக்காவில் ஆற்றுப் பயணங்களில் தோணிக்காரர்களை அழைப்பதற்கு இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் குறிப்புகள் சொல்கின்றன. 1860-களில், அமெரிக்க நவீனங்களில் இது பரவலானது. 1860-ல் FOWLER தன்னுடைய A DICTIONARY OF MODERN ENGLISH USAGE-ல் அதனைத் A SHOUT TO CALL ATTENTION என்று தெளிவாக விவரித்ததாக தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் எழுதியிருக்கின்றனர்.

1876-ல் அலெக்சாண்டர் கிரகாம்பெல் ஆரம்ப காலத் தொலைபேசி அழைப்புக்களில் “AHOY” என்ற ஆங்கிலச் சொல்லையே பயன்படுத்தினார், அது ஒரு MIDDLE ENGLISH வார்த்தை. அதனைத் தமிழிற் பெயர்ப்பதானால் மிகச் சிறப்பாக “ஓய்” என்று நாம் கூப்பிடுவதாகவும் அமைந்திருக்கிறது. தொலைபேசி அழைப்பில் முதன்முதலில் HELLO என்ற சொல்லைப் பயன்படுத்தியவர் எடிசன் தான்! மேலும் அவர், 1877-ல் அவர் CENTRAL DISTRICT AND PRINTING TELEGRAPH COMPANY OF PITTESBURGHன் தலைவருக்கு இந்தச் சொல்லையே அழைப்புக்களில் பயன்படுத்துமாறு வற்புறுத்தி கடிதமும் எழுதினார் என்று நூல்கள் தெரிவிக்கின்றன.

இன்றைக்கு காலையில் எழுந்தது முதல் இரவு தூக்கம் வருகிற வரை ‘செல்லோடு உறவாடு’ என பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறோம். ‘அந்தக் காலத்துல நம்ம வீட்லயும் போன் இருந்துச்சு. அதுக்காக, நாங்க போனுக்குப் பக்கத்துலயே படுத்துக்கவா செஞ்சோம்? இப்ப என்னடான்னா, போனும் கையுமாவே இருக்கீங்களே! தலைமாட்டுல கூட போனை வைச்சிக்கிறீங்க. நைட் ரெண்டு மணிக்குக் கூட யார்கிட்டயோ பேசிக்கிட்டிருக்கீங்களே...’ என அங்கலாய்ப்புடன் கேட்கிற பெரியவர்கள் இருக்கிறார்கள்.

சிலர் ‘ஹலோ’ என்பதற்குப் பதிலாக, ‘வணக்கம்’ என்பார்கள். சிலர் ‘வாழ்க வளமுடன்’ என்பார்கள். சிலர், ‘ராதே கிருஷ்ணா’ என்றும் ‘நாராயணா’ என்றும் ‘நமசிவாயம்’ என்றும் சொல்லிப் பேசுவார்கள். இன்றைக்கும் பலரும் வெளியூரில் இருந்தோ வெளிநாட்டில் இருந்தோ போன் வந்தால், ‘ஹல்ல்ல்ல்ல்லோ’ என்று சத்தமாகப் பேசுவார்கள். ரயில் பயணம், பஸ் பயணம், ஷேர் ஆட்டோப் பயணங்களில் இப்படி உரக்கப் பேசுகிறவர்களைப் பார்க்கலாம். திருநெல்வேலிக்குப் பக்கத்தில் இருக்கிற தன் அண்ணனுக்கு வண்டி ஓட்டிக் கொண்டே போனில் பேசும்போது, ‘அப்படியே நெல்லையப்பர் கோயில்லேருந்து லெஃப்ட் எடுங்கண்ணே’ என்று இடது கையை தடக்கென நீட்டுவார்கள். ’அப்புறம் ஒரு ரைட் எடுங்க’ என்று அந்த இடதுகையையே இப்படியாகத் திருப்பிக் காட்டுவார்கள். எதிர்முனையில் பேசுகிற அண்ணனுக்கும் புரியாது. பின்னே வண்டி ஓட்டிக்கொண்டு வருபவர் இவரின் செய்கையைப் பார்த்துப் பதறித்தான் போவார்.

‘காலையில் நான் வரட்டுமா/ கண்ணில் மருந்து தரட்டுமா / மருந்து தந்தால் போதுமா/ மயக்கம் அதில் தீருமா / தீர்த்து வைப்பேன் நானம்மா/ தேவை என்ன கேளம்மா’ என்று எம்ஜிஆர் போனிலேயே பாடி, காதல் வளர்த்திருக்கிறார். அந்தஒ பாடல்: ‘ஹலோ ஹலோ சுகமா? ஆமாம் நீங்க நலமா?’

‘ஹலோ... ஹலோ... ஹலோ மை டியர் ராங் நம்பர்/ கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்/ நேரிலே பார்த்தால் என்ன வெட்கம் / கற்பனை ஓராயிரம்/ ஒரு முறை பார்த்தால் என்ன’ என்று கமல்ஹாசனும் ஒய்.விஜயாவும் ‘ராங்கால்’ மூலம் பேசத்தொடங்கி ‘ரைட்கால்’ பாடலாகப் பாடினார்கள்.

'சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா/ இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்/ என் வீட்டில் இரவு அங்கே இரவா இல்லை பகலா எனக்கும் மயக்கம்’ என்று ‘அழகன்’ படத்தில் மம்முட்டியும் பானுப்ரியாவும் இரவு தொடங்கி மறுநாள் காலையில் தூர்தர்ஷன் தொடங்கியும் கூட பேசிக்கொண்டிருப்பார்கள்/ படத்தின் டைட்டிலில், எல்லா நடிகர் நடிகைகளின் பெயர்களைப் போட்டுவிட்டு, ‘இவர்களுடன்... டெலிபோன்’ என்று போடுவார் கே.பாலசந்தர்.

தெருமுனையில், ஆட்டோ ஸ்டாண்டில், டீக்கடை வாசலில் நிற்பவர்களிடம் நாம் வழி கேட்போம். அவர்களும் சொல்வார்கள். இப்போது அவர்களுக்கு அருகில் சென்றால்தான் அவர்கள் யாரிடமோ போனில் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதே தெரிகிறது.

போதாக்குறைக்கு, நமக்குத் தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவுக்காரர்கள், அலுவலக நண்பர்கள்தான் நமக்குப் போன் பேச வேண்டும் என்பதும் மாறிவிட்டது. ரியல் எஸ்டேட்காரர் பேசுவார். லோன் வேணுமா என்கிற விசாரிப்புகள் வரும். மெடிக்ளைம் பாலிஸி, உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு பிரெஞ்ச் சொல்லிக்கொடுக்க வகுப்பு, எங்கள் டிரஸ்ட்டில் 120 குழந்தைகள் இருக்கின்றன. ஏதேனும் டொனேஷன் தருகிறீர்களா... என்று யார் வேண்டுமானாலும் நம்முடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

செல்போன் செய்யும் மாயாஜாலங்களில் மிகப்பெரிய விஷயமாக எல்லோரும் சொல்வது இதுதான். பொது இடங்களில், ரயிலில், பேருந்துகளில், பெண்கள் போனில் பேசிக்கொண்டுதான் வருகிறார்கள். ஆனால் பக்கத்தில் இருக்கிற நமக்கே அவையெல்லாம் கேட்காதபோது, பாவம் எதிர்முனையில் இருப்பவர்களுக்கு எப்படிக் கேட்கும் என்று வியக்காதவர்களே இல்லை.

சரி... நவம்பர் 21 ‘உலக ஹலோ தினம்’. இந்த நாளில், உங்களுக்கெல்லாம்... ஒருநிமிஷம் போன் பேசிட்டு வந்துடுறேன். ‘ஹலோ... யாருங்க? இல்ல இல்ல... எங்க வீட்ல எல்.கே.ஜி. சேக்கறதுக்கு குழந்தைங்க இல்லீங்க!’

‘ஹலோ’ வாழ்த்துகளை ‘ஹலோ’ சொல்லி முடிக்கிறேன்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in