
சென்னையில் நேற்று இரவு விடிய விடிய கொட்டி தீர்த்த மழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த 29-ம் தேதி தொடங்கியது பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னையில் நேற்று காலை முதல் விட்டுவிட்டு மழை பெய்தது. பிறகு இரவு நேரத்தில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. சென்னை மயிலாப்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் சாலை மழை நீரால் மூழ்கியது. இதேபோல் சென்னையில் அண்ணாசாலையில் ஆறுபோல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சென்னை ராயப்பேட்டை ஜிபி சாலையில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. இதனால் பல இருசக்கர வாகனங்கள் நீரில் மூழ்கியது. பல வாகனங்கள் பழுதாகி சாலையில் நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். எழும்பூரில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தேனாம்பேட்டை பகுதியில் கொட்டி தீர்த்த மழையால் சாலைகளில் மழைநீர் ஆறு போல் ஓடியது. இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதேபோல் சாந்தோம், மயிலாப்பூர், பெசன்ட் நகர், வேளச்சேரி, கே.கே.நகர், போரூர், வளசரவாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீர் தேங்கியது. தேங்கிய மழை நீரை அகற்ற மாநகராட்சி ஊழியர்கள் துரித நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.