நீடிக்கும் வறட்சியால் காயும் வயல்கள்: கருகும் ராபி பயிர்களால் விவசாயிகள் சோகம்

ராபி பயிர்கள் சேதம்
ராபி பயிர்கள் சேதம்நீடிக்கும் வறட்சியால் காயும் வயல்கள்: கருகும் ராபி பயிர்களால் விவசாயிகள் சோகம்
Updated on
1 min read

மழையில்லாமல் நீடிக்கும் வறட்சியால் இமாச்சலப் பிரதேசத்தில் 85,538.20 ஹெக்டேர் ராபி பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இமாச்சலப் பிரதேசத்தில் நீடித்த வறட்சியால் ராபி பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் ஹமிர்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக ரூ.2,857.78 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். மாநிலம் முழுவதும் உள்ள கள அலுவலர்களின் அறிக்கையின்படி, 4,01,853 ஹெக்டேர்களில், 85,538.20 ஹெக்டேர் நிலத்தில் பயிர்கள் போதிய மழையின்மையால் சேதமடைந்துள்ளன.

பிலாஸ்பூர், ஹமிர்பூர், மண்டி, சிம்லா மற்றும் சிர்மௌர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 33 சதவீத ராபி பயிர்கள் சேதமடைந்துள்ளன. பழங்குடியினப் பகுதிகளான கின்னவுர், லாஹவுல் மற்றும் ஸ்பிட்டியைத் தவிர, மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்களில் பத்து மாவட்டங்களில் இதுவரை 9,462 லட்சம் ரூபாய் பயிர்கள் சேதம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது. மீதமுள்ள ஐந்து மாவட்டங்களில் பயிர் சேதம் தலா 33 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது என்று வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போதிய மழை பெய்யாததால் இமாச்சல் பிரதேசத்தில் கோதுமை, பார்லி, பட்டாணி உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் பாசனத்திற்காக மழையை முழுமையாக நம்பியிருந்த பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில வேளாண் இயக்குநர் ராஜேஷ் கௌசிக் தெரிவித்தார்.

இமாச்சலப் பிரதேசத்தில் ஜனவரி 1 முதல் பிப்ரவரி 28 வரை 36 சதவீத மழைப்பற்றாக்குறையும், மார்ச் 1 முதல் மார்ச் 8-ம் தேதி வரை 84 சதவீத மழைப்பற்றாக்குறையும், 2022 டிசம்பரில் 100 சதவீத மழைப்பற்றாக்குறையும் இருந்துள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in