`ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வேண்டும்'- மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மறியல்

விவசாயிகள் சாலை மறியல்
விவசாயிகள் சாலை மறியல்

அதிக கனமழை பெய்ததன் விளைவாக பாதிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள், தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இன்று முற்றுகை மற்றும்  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் விளைவாக இந்த மாதம் 11-ம் தேதி முதல் 12-ம் தேதி வரையிலான ஒரு நாளில் மிக அதிகபட்ச அளவாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்  44 செ. மீ மழை பதிவானது. அதன் விளைவாக சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாக்களில் அனைத்து விளை நிலங்களும்  நீரில் மூழ்கி வீணாகியது. அதனால் பாதிக்கப்பட்டுள்ள  தங்களுக்கு அரசாங்கம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அரசு தரப்பில் உரிய கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  33 சதவீதத்திற்கும் மேல் பாதிப்பு உள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார்.  

இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும், பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்,  100% பாதிப்பு கணக்கிடப்பட்டு பயிர்க் காப்பீடுத் தொகை வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்  பி.ஆர்.பாண்டியன் தலைமையில் இன்று கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதனையொட்டி ஆயிரத்துக்கும்  மேற்பட்ட விவசாயிகள் சீர்காழி புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்று கோட்டாட்சியர்  அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர். அவர்களிடம் காவல்துறையினர் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு அதன் பின்னர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கோட்டாட்சியர் நேரில் வந்து தங்களது கோரிக்கைகள் குறித்த பதில் அளித்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என பி.ஆர்.பாண்டியன் அறிவித்ததை தொடர்ந்து சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு கோட்டாட்சியர் அர்ச்சனா சாலை மறியல் செய்தவர்களிடம்  நேரில் வந்து சமாதானம் பேசி போராட்டத்தை கைவிடச் செய்தார். விவசாயிகளின் கோரிக்கைகள் மாவட்ட ஆட்சியர் மூலமாக தமிழக அரசிடம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும்,  விரைவில் அதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் விவசாயிகளிடம் தெரிவித்தார். 

விவசாயிகளின் இந்த போராட்டத்தால்  சீர்காழி நகரில் போக்குவரத்து மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in