
சென்னையில் வருமான வரித்துறை பெண் அதிகாரியிடம் தவறாக நடக்க வழக்கில் தனியார் கொரியர் நிறுவன ஊழியரை, ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.
சென்னை வருமான வரித்துறையில், இணை ஆணையராக பணி புரிபவர் நந்தினி. இவர், சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய 6 வது நுழைவாயில் வழியாக, ரயில் நிலையத்திற்கு சென்ற போது, அங்கிருந்த யானைக்கவுனி பகுதியைச் சேர்ந்த 23 வயதான அஜித்குமார் என்ற வாலிபர் தொட்டுச் சீண்டி தவறாக நடக்க முயன்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண் அதிகாரி கத்திக் கூச்சலிட்டுள்ளார். அருகில் இருந்தவர்கள் ரயில்வே போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு அஜித்குமாரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.
பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட அஜித்குமார், நீதிமன்ற உத்தரவுபடி, சென்னை சைதாப்பேட்டை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.