`உங்கள் தலையெழுத்தை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்'- மாணவர்களை எச்சரிக்கும் ரயில்வே எஸ்.பி

`உங்கள் தலையெழுத்தை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்'- மாணவர்களை எச்சரிக்கும் ரயில்வே எஸ்.பி

"ரயில்களில் மாணவர்களின் அட்டகாசங்கள் தொடர் கதையாகியுள்ள நிலையில், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று ரயில்வே எஸ்பி எச்சரித்துள்ளார்.

கோவை மாநகர் பகுதி மற்றும் அதன் புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி அலுவலகங்களில் நேற்று முன்தினம் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக சென்னை சிட்லப்பாக்கத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை, கோவை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகளுக்கு வரும் அனைத்து ரயில்களிலும் ரயில்வே போலீஸார் தீவிர சோதனை நடத்தி, ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளின் உடமைகளை சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர். சந்தேக நபர்கள் ரயில் நிலையங்களில் வலம் வருகிறார்களா என்பதையும் சிசிடிவி பதிவுகள் மூலம் போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாரின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ரயில்வே எஸ்.பி அதிவீர பாண்டியன் நேரில் ஆய்வு மேற்கொண்டு அறிவுரைகளை வழங்கினார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரயில்வே எஸ்.பி அதிவீர பாண்டியன், ரயில் மூலம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் சந்தேகத்திற்கிடமான நபர்களை பிடித்து அவர்களின் உடமைகளை தொடர்ந்து ரயில்வே போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயில் பெட்டிகளில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதும் உள்ளதா என்பதை கண்டறிய மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களின் உதவியுடன் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்படுள்ளது. அதேபோல சென்னை, திருச்சி, மதுரை, கோவை, விருதுநகர் உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 356 ரயில்வே போலீஸாரும், சென்னை மாவட்டத்தில் 410 ரயில்வே போலீஸாரும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களின் அட்டகாசங்கள் தொடர் கதையாகியுள்ள நிலையில், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாணவர்கள் தங்கள் செயல்களுக்கு ஏற்ப அவரவர் தலையெழுத்துகளை அவரவரே தீர்மானித்துக் கொள்ள வேண்டும்" என எச்சரித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in