அழகிரியும் அந்த ஐந்து பேரும்..!

கரைகிறதா தமிழக காங்கிரஸ்!
ரயில் மறியல் போராட்டத்தில் கே.எஸ்.அழகிரி
ரயில் மறியல் போராட்டத்தில் கே.எஸ்.அழகிரி

மார்ச் 23-ம் தேதி, குஜராத்தின் சூரத்தின் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவதூறு வழக்கு ஒன்றில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆங்காங்கே திடீர் போராட்டங்களில் ஈடுபட்டனர். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் கும்பகோணத்தில் ஐந்தே பேருடன் அமர்க்களமாய்ப் போய் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்தார். இந்த படம் மீடியாக்களில் வெளியானதிலிருந்து காங்கிரஸையும் அழகிரியையும் வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரிRAGU R

ஒரு காலத்தில் தமிழகத்தை ஆண்ட காங்கிரஸ் கட்சி, மக்களுக்கான பல நல்ல திட்டங்களைத் தந்திருக்கிறது. அத்தகைய செல்வாக்குடன் இருந்த கட்சி இன்றைக்கு, மாநிலத் தலைவருக்குப் பின்னால் ஐந்து பேர் என்ற நிலைக்கு தேய்ந்து போயிருக்கிறது. 1967-ல், தமிழகத்தில் முதல் முறையாக திமுக ஆட்சிக்கு வந்ததும் எதிர்க்கட்சி வரிசைக்குப் போன காங்கிரஸ், ஒருகட்டத்தில் அந்த அந்தஸ்தையும் பறிகொடுத்தது. திமுக - அதிமுக என மாறி மாறி சவாரி செய்தே பழகிப் போன காங்கிரஸுக்கு சொந்தக் கால் இருக்கும் நினைப்பே மறந்து போனது.

இருந்தாலும் திமுக, அதிமுகவுக்கு அடுத்து தமிழகத்தில் மூன்றாவது பெரியகட்சி நாங்கள் தான் என மார்தட்டி நின்றது காங்கிரஸ். தேமுதிகவின் வரவு அந்த நினைப்பையும் கெடுத்தது. இப்போது, எந்த அதிகாரத்தையும் சுவைக்காத நாம் தமிழர் கட்சிக்கு கூடும் கூட்டம் கூட காங்கிரஸ் கட்சிக்கு கூடுவதில்லை. இந்த லட்சணத்தில் தான் ‘காமராஜர் ஆட்சி அமைப்போம்’ என்று இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறது தமிழக காங்கிரஸ்.

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

காங்கிரஸில் வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் என ராகுல் காந்தி எத்தனைதான் மெனக்கிட்டாலும் பெரும்பாலான மாநிலங்களில் அது சாத்தியமாகவில்லை. அதில் தமிழகவும் ஒன்று. தந்தை... தந்தைக்குப் பின் மகன் என்ற நிலையே அண்மையில் நடந்த ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் வரைக்கும் தொடர்கிறது. இதனாலேயே காங்கிரஸுக்குள் புதியவர்கள் வரப் பயப்படுகிறார்கள்.

தங்களுக்கு பெரும் சவாலாக வளர்ந்து நிற்கும் பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் நிறையப் படிக்க வேண்டி இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தென் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழிசை, வடமாவட்டத்தைச் சேர்ந்த எல்.முருகன், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அண்ணாமலை என திசைக்கு ஒரு பக்கமாய் இருந்து மாநிலத் தலைவர்களைத் தேர்வு செய்து பதவியில் அமர்த்துகிறது பாஜக. அதனால், பரவலாக மாநிலம் முழுமைக்கும் அந்தக் கட்சி வளர்ச்சி கண்டிருக்கிறது. பாஜக கூட்ட மேடைக்கு முன்பாக காலி சேர்களை படம்பிடித்துப் போட்ட காலம் போய் இப்போது அண்ணாமலை கூட்டத்துக்கும் முண்டியடிக்கிறது கூட்டம்.

என்னதான் பகடிக்கு உள்ளானாலும் ‘தாமரை மலர்ந்தே தீரும்’ எனச் சொல்வதைக் கடைசிவரை நிறுத்தவில்லை தமிழிசை. ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு பிரச்சினையால் தூத்துக்குடியில் பாஜக - அதிமுக அணிக்கு அதிருப்தி அலைவீசியபோதும் கனிமொழியை எதிர்த்து தைரியமாக தேர்தல் களத்தின் நின்றார் தமிழிசை. முருகன், கையில் வேலெடுத்து யாத்திரை சென்றார். சொந்தக் கட்சிக்குள் பிணக்குகள் இருந்தாலும் அண்ணாமலை இன்னமும் அதிரடி அரசியல் செய்துகொண்டிருக்கிறார்.

இவை எல்லாமே தமிழகத்தில் பாஜகவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திக்கொண்டே இருக்கிறது என்பதை காங்கிரஸ்காரர்கள் இன்னமும் உணரவில்லை. அதனால் தான் ரயிலை மறிக்க அழகிரியால் தனக்குப் பின்னால் பத்து பேரைக்கூட திரட்ட முடியவில்லை. பல விதத்திலும் புதியவர்களின் நம்பிக்கையை இழந்து நிற்கும் காங்கிரஸ், ‘எதுவா இருந்தாலும் மேலே இருக்கவங்க (கூட்டணி தலைமை) பாத்துப்பாங்க’ என்ற மனநிலையிலேயே இன்னமும் இருக்கிறது.

மாநிலத் தலைவருக்குப் பின்னால் பத்து பேரைக்கூடவா திரட்ட முடியாது என்ற கேள்வியுடன் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினருமான ரமேஷ்குமாரிடம் பேசினோம்.

“கே.எஸ்.அழகிரி காரில் சென்றுகொண்டிருக்கும்போது தகவல் கிடைக்கிறது. இதற்கென ஆள், படை, அம்பாரி எல்லாம் திரட்ட அந்த நேரத்தில் மனம் விரும்பாது. இந்திய தேசத்தின் நம்பிக்கை முகம் ராகுல். அவரது வழக்கில் தீர்ப்பு வெளியான தகவல் கிடைத்ததும் காரை உடனே ரயில்வே ஸ்டேஷனுக்கு விட்டிருப்பார். இதில் தவறு ஒன்றும் கிடையாது. இதை விமர்சிக்கத் தேவையில்லை என்றாலும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி அமைப்பு ரீதியாக வலுவில்லாமல் தான் உள்ளது. அதை எளிதாக வலுப்படுத்த முடியும். ஏனென்றால் மக்கள் மத்தியில் இன்னமும் காங்கிரஸுக்கு தனி மரியாதை இருக்கிறது.

கட்சியை பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டுமானால் திடீர் போராட்டங்கள் நடத்தி தொண்டர்களைத் திரட்ட ஆக்டீவான கமிட்டிகள் அமைக்கப்பட வேண்டும். கணக்கு வழக்கில்லாமல் அணிகளை அமைப்பதை விட ஐந்து, ஆறு அமைப்புகள் உறுதியாக இருந்தால்போதும். காங்கிரஸில் இப்போது அமைப்புகள், அணிகள் கூடுகிறதே தவிர அவர்களுக்குக் கீழே பணிசெய்ய தொண்டர்கள் இல்லை. அவரவரும் தலைவராக வரவேண்டும் என்பதற்காக ஒரு அணியை, அமைப்பை உருவாக்குகின்றார்கள். கட்சியை அமைப்பு ரீதியாகப் பலப்படுத்த வேண்டும். கூட்டணி என்பது தேர்தலுக்கானது மட்டுமே. அதனால் கட்சியை வளர்க்க முடியாது. கட்சியை போராட்டங்கள் வழியாகவே வலுப்படுத்த முடியும்.

கட்சிக்கு விசுவாசமாக இருக்கும் காங்கிரஸ் எம்எல்ஏ, எம்பி-க்களைவிட கூட்டணி கட்சிக்கு விசுவாசமாக இருக்கும் எம்பி, எம் எல்ஏ-க்கள் தான் இப்போது அதிகமாக இருக்கிறார்கள். தோழமைக் கட்சியாக இருந்தாலும், ஆளும் கட்சி தவறு செய்தால் அதைச் சுட்டிக்காட்டும் கட்சிதான் மக்கள் மன்றத்தில் நிற்கும். காமராஜர் காலத்திற்குப் பின்பு தமிழகத்தில் தொலைநோக்குத் திட்டங்கள் எதுவுமே இல்லை. மாவட்ட வாரியாக மக்கள் பிரச்சினைகளுக்காகவும் காங்கிரஸ் போராட வேண்டும்.

கே.எஸ்.அழகிரி மாநிலத் தலைவராக வந்ததும் சிலமுடிவுகள் எடுத்து நல்லபடியாகவே செய்தார். அதில் மாற்றுக்கருத்து இல்லை. கட்சியையும் துடிப்போடு வைத்திருந்தார். ஆனால், அவரால் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை. மாநிலத் தலைவராக இருப்பவரை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும். ஆனால், இங்கே தலையீடு அதிகம்.

கரோனா காலத்தில் கட்சி வளர்ச்சிப் பணிகளுக்காக என்னை மதுரை மாநகர் மாவட்ட பொறுப்பாளராகப் போட்டார்கள். அப்போது பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் கண்டித்து மதுரையில் 19 பெட்ரோல் பங்குகள் முன்பாக போரட்டம் நடத்த திட்டமிட்டேன். ஆனால் மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர், ‘என்னால் ஒரு பெட்ரோல் பங்கு முன்புதான் போராட்டம் நடத்தமுடியும்; அதற்குமேல் முடியாது’ என்று சொல்லிவிட்டார். ஆனால் நான், திட்டமிட்டபடி நடத்திக்காட்டினேன். செயல்படாத அந்த மாநகர் மாவட்ட தலைவர் மீது நடவடிக்கை எடுக்க தலைமைக்கு அறிக்கை கொடுத்தேன். இந்த நிமிடம் வரை நடவடிக்கை இல்லை. இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?

எல்லாக் கட்சியிலும் மாநிலத் தலைமையின் கட்டுப்பாட்டில் தான் எம்பி, எம்எல்ஏ-க்கள் இருப்பார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சியில் ஆளாளுக்கு தனி ஆவர்த்தனம் செய்கிறார்கள். கட்சியின் பொருளாளர் ரூபி மனோகரன் மீது மாநிலத் தலைவர் நடவடிக்கை எடுக்கிறார். அந்த நடவடிக்கையை மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் ரத்து செய்கிறார். இப்படி இருந்தால் கட்சியினருக்கு மாநிலத் தலைவர் மீது எப்படி மரியாதை வரும்?

கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் முடிந்துவிட்து. தொடர்ந்து அவரே நீடிப்பாரா அல்லது புதியவர் வருவாரா என்று தலைமை தெளிவுபடுத்த வேண்டும். இரண்டையும் செய்யாமல் இருந்தால் மாநில தலைவரை யார் மதிப்பார்கள்? எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம் எனக் கூறப்படும் நிலையில் அவர் அழைத்தால் மக்கள் பிரதிநிதிகள் எப்படி வருவார்கள்?” என்றார் ரமேஷ்குமார்.

வழிப் பயணத்துக்கு நடுவே அவசரமாக முன்னேற்பாடு இல்லாமல் செய்த திடீர் போராட்டம் என்று அழகிரியின் ரயில் மறியல் போராட்டத்துக்கு தன்னிலை விளக்கம் அளிக்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள். அதை விட்டுத்தள்ளுவோம்... காங்கிரஸுக்கு அதிகமான எம்பி-க்களை தந்திருக்கும் மாநிலம் தமிழகம். அடுத்த தலைவராக வரப்போகிறேன் என்று சொல்பவர்களும் இதற்கு முன் தலைவர்களாக இருந்தவர்களும் தமிழக காங்கிரஸில் ஏராளம் இருக்கிறார்கள். அழகிரியாவது ஐந்து பேருடன் போய் ரயிலை மறித்தார். இவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்... இவர்களை எல்லாம் வைத்துக்கொண்டு தான் ஆட்சி மாற்றத்துக்கு அறைகூவல் விடுக்கிறாரா ராகுல்? என்ற கேள்விகள் எல்லாம் சாமானியர்களுக்கும் எழவே செய்கிறது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in