
சாலையில் நிறுத்தி வைத்திருந்த 10-க்கும் மேற்பட்ட நான்கு மற்றும் இருசக்கர வாகனங்களை கஞ்சா போதையில் அடித்து நொறுக்கி ரவுடிகள் அட்டகாசம் செய்த விவகாரத்தில் எம்கேபி நகர் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகர் 1-வது தெருவில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது நான்கு மற்றும் இருசக்கரவாகனங்களை சாலையோரம் நிறுத்தி வைத்திருந்தனர். நேற்றுமுன் தினம் நள்ளிரவு அவ்வழியாக முகமூடி அணிந்து வந்த 10 பேர் கொண்ட கும்பல் கஞ்சா போதையில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு மற்றும் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்களை அந்த கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டியதால் அவர்கள் அலறி அடித்து ஓடினர். பின்னர் இதே கும்பல் பிவி காலனி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களையும் அடித்து நொறுக்கியது. இந்த தாக்குதலில் காயத்ரி, இம்ரான்கான், நவீன்,கோபி, உள்ளிட்டோர் காயமடைந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த எம்கேபி நகர் போலீஸார் ரகளையில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால், அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட கண்ணன், ராயல் ஆல்பர்ட் உள்ளிட்ட 10 பேர் எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ரகளையில் ஈடுபட்ட ரவுடிகள் மடிப்பாக்கம் செல்வம், வில்லிவாக்கம் ராஜேஷ் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்ததும், அந்த பகுதியில் உள்ள கடைக்காரர்களிடம் மாமுல் கேட்டு தரமறுத்ததால் பொதுமக்களுக்கு பயத்தைக் காட்டி மாமுல் வசூல் செய்ய ரகளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் தப்பி ஓடிய ரவுடி கும்பலைத் தேடிவருகின்றனர்.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் பணியில் மெத்தனமாக செயல்பட்டதாக எம்கேபி நகர் சட்ட ஒழுங்கு ஆய்வாளர் அம்பேத்கரை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.