
மும்பையில் தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் போல நடித்து 1.70 கோடி மதிப்புள்ள 3 கிலோ தங்கம், 25 லட்ச ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்ற 4 பேர் கொண்ட கும்பலை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மும்பை நகரின் ஜவேரி பகுதியில் உள்ள தொழிலதிபர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை இயக்குநரக அதிகாரிகள் என்று நான்கு பேர் நேற்று மாலை வந்துள்ளனர். தொழிலதிபர் அலுவலகத்தில் அவர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தொழிலதிபரின் அலுவலகத்தில் இருந்த ரூ.25 லட்சம் ரொக்கம், ரூ.1.70 கோடி மதிப்புள்ள 3 கிலோ தங்கம் ஆகியவற்றை அமலாக்கத்துறை இயக்குநர அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டுச் சென்றனர்.
இதுகுறித்து தொழிலதிபர் விசாரணை நடத்திய போது வந்தவர்கள் அமலாகத்துறை அதிகாரிகள் இல்லை என்றும், அமலாக்கத்துறை அதிகாரிகள் போல வந்து கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸில் தொழிலதிபர் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஜவேரி பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி கொள்ளையில் ஈடுபட்ட நான்கு பேரை தேடி வருகின்றனர். சினிமா பாணியில் நடைபெற்ற இந்த கொள்ளைச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.