‘போர் வரப்போகிறது..’: ராகுல் புலம்பல் பொருட்படுத்தக் கூடியதா?

‘சீனாவும் பாகிஸ்தானும் சேர்ந்து திடீர் தாக்குதலுக்கு தயாராகின்றன’
சீன எல்லையில் கைகலப்பு
சீன எல்லையில் கைகலப்பு

’சீனா, பாகிஸ்தான் ஆகிய அண்டை நாடுகள் ஒன்றுசேர்ந்து இந்தியா மீது போர் தொடுக்க இருக்கின்றன..’ என்று ராகுல் காந்தி தொடர்ந்து எச்சரித்து வருகிறார். அவரையும் அவரது பேச்சையும் துச்சமாக பாஜக மதிப்பதில்லை என்றபோதும், பொதுவெளியில் ராகுல் குரலை செவிமெடுப்போர் அதிகரித்து வருகின்றன.

’இந்திய எல்லைக்குள் சீனா ஆக்கிரமித்து வருவதாகவும், பதுங்கு தளங்கள் மற்றும் கிராமங்கள் அமைப்பது முதல் படையணிகளை குவிப்பது வரை அதன் அத்துமீறல் அதிகரித்து வருவதாகவும்’ ராகுல் காந்தி எச்சரித்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக, ’இந்தியா மீது சீனா போர் தொடுக்கும் ஏற்பாடுகளில் மும்முரமாக இறங்கி இருப்பதாகவும், எல்லையில் சூழும் அச்சுறுத்தல் குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும்’ என்றும் அவர் வலியுறுத்தி வருகிறார்.

இதற்கு பாஜக நிர்வாகிகள் மற்றும் மத்திய அமைச்சர்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. ‘ராகுல் காந்தி நமது ராணுவத்தை அவமரியாதை செய்கிறார். எல்லையை பாதுகாக்கும் ராணுவ வீரர்களின் மன உறுதியை குலைக்கப் பார்க்கிறார்’ என்றெல்லாம் தாக்கினார்கள். அதன் உச்சமாக, ‘ராகுலுக்கு சீனாவில் நண்பர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்களுடன் பரஸ்பரம் தகவல்கள் பரிமாறப்படுகின்றன’ என்றெல்லாம் குற்றம் சாட்டினார்கள்.

எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள்
எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள்

’சீனா இந்தியா மீது போர்த்தொடுக்கப் போகிறது’ என்ற தனது முந்தைய எச்சரிக்கையின் தொடர்ச்சியாக தற்போது, ராகுல் காந்தி புதிய தகவல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதன்படி ”சீனா, பாகிஸ்தான் ஆகிய இரு அண்டை நாடுகளும் ஒன்றிணைந்து இந்தியா மீது போர் தொடுக்க இருக்கின்றன. பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு நிலைகளில் பாகிஸ்தானுக்கான சீனாவின் உதவிகள் அனைத்தும் இந்தியாவுக்கு எதிரான நிலையிலிருந்தே வழங்கப்பட்டுள்ளன.

போர் ஏற்படும் சூழலில், இரு நாடுகள் இந்தியாவுக்கு எதிராக நிற்பது நம்மை வெகுவாக பாதிப்படையச் செய்யும். எல்லையில் நிலவும் போர்ச்சூழலை பொருட்படுத்தாது, நாட்டுக்குள் வெறுப்பும், குழப்பங்களும் அதிகரித்து வருவது கவலைக்குரியது. எல்லையில் 2 நாடுகள் கைகோர்த்து திடீர் தாக்குதலுக்கு ஆயத்தமாகும் நிலையில், மத்திய அரசு நீண்ட நாட்களுக்கு மௌனம் சாதிக்க முடியாது” என்று ராகுல் காந்தி தற்போது தெரிவித்துள்ளார். முன்னாள் ராணுவ வீரர்களுடனான நேற்றைய சந்திப்பை ஒட்டி ராகுல் காந்தி தெரிவித்திருக்கும் இந்த கருத்தையும், அவரது கரோனா பரவல் தொடர்பான முந்தைய முன்னெச்சரிக்கைகளையும் ஒப்பிட்டு ராகுலுக்கு ஆதரவான பதிவுகள் சமூக ஊடகங்களில் அதிகரித்து வருகின்றன.

2019-ம் ஆண்டின் இறுதியில், சீனாவின் வூஹானில் கரோனா வைரஸ் களேபரம் தொடங்கியபோதே, ’பெருந்தொற்று பேராபத்துக்கு எதிராக இந்தியா தயாராக வேண்டும்’ என்றும் ராகுல் வலியுறுத்தினார். அதேபோல டெல்டா அலை பரவல் காரணமாக, சர்வதேசளவில் கொத்துக்கொத்தாய் உயிர்கள் பறிப்போனதன் மத்தியிலும், ராகுல் காந்தி மத்திய அரசை எச்சரித்தார். புதிய திரிபின் வீரியம் குறித்தும், இந்தியாவின் மருத்துவக் கட்டமைப்பு அவற்றை எதிர்கொள்ளும் வகையில் தயாராவதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார்.

தனது நடைபயணத்தில் ராகுல் காந்தி
தனது நடைபயணத்தில் ராகுல் காந்தி

ஆனால் அப்போதெல்லாம் அந்த கருத்துக்களுக்காக ராகுல் எள்ளி நகையாடப்பட்டார். மக்கள் மத்தியில் வீண் பீதியையும், பாஜக அரசின் மீது வன்மத்தையும் பரப்புவதாக அவருக்கு எதிராக கண்டனங்கள் கிளம்பின. ஆனால் நிதர்சனம் வேறாக இருந்தது. ராகுல் எச்சரித்தபடியே, பெருந்தொற்று பரவலின் மத்தியில் இந்தியா அலைக்கழிந்தது; ஏராளமான உயிர்களை தேசம் பறிகொடுத்தது.

இந்தியா எதிர்கொண்ட இந்த நெருக்கடி நிலைகளில் எல்லாம் ராகுல் காந்தி எச்சரித்தபடியே நடந்தது. இவற்றை ஒப்பிட்டு, ’எல்லையில் சூழும் அச்சுறுத்தல்கள் குறித்த ராகுலின் தற்போதைய கவலையை வெற்று புலம்பலாக ஒதுக்க வேண்டாம். நாட்டு பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் அலட்சியம் கூடாது’ என்று ராகுலுக்கான ஆதரவு குரல்கள் தற்போது எழுந்து வருகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in