‘யார் வந்தாலும் ராகுல் மீதுதான் பழி விழும்; அதற்கு அவரே தலைவராகலாம்!’

சத்தீஸ்கர் சுகாதாரத் துறை அமைச்சர் அதிரடி
‘யார் வந்தாலும் ராகுல் மீதுதான் பழி விழும்; அதற்கு அவரே தலைவராகலாம்!’

“காங்கிரஸ் கட்சிக்கு யார் வேண்டுமானாலும் தலைவராக வரலாம். ஆனால், தோல்வி ஏற்பட்டால் ராகுல் காந்தி மீது குற்றம்சாட்டவே எல்லோரும் விரும்புவார்கள். எனவே அவரே கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொள்வது நல்லது” என்று அதிரடியாகத் தெரிவித்திருக்கிறார் சத்தீஸ்கர் சுகாதாரத் துறை அமைச்சர் டி.எஸ்.சிங் தேவ்.

யார் இந்த டி.எஸ்.சிங் தேவ்?

இன்றைய தேதிக்கு சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மட்டும்தான் காங்கிரஸ் தலைமையிலான அரசுகள் நடக்கின்றன. சத்தீஸ்கர் சுகாதாரத் துறை அமைச்சராக இருக்கும் டி.எஸ்.சிங் தேவ், கட்சிக்குள் அவ்வப்போது கலகத்தை ஏற்படுத்திவருபவர். ஜூலை 16-ல், உள்ளாட்சித் துறை அமைச்சர் பதவியை உதறிய அவர், சத்தீஸ்கர் காங்கிரஸ் அரசு மீதே பல புகார்களை முன்வைத்தவர். பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 8 லட்சம் வீடுகள் கட்டித்தர பூபேஷ் பகேல் தலைமையிலான சத்தீஸ்கர் அரசு தவறிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். கடந்த ஆண்டு, தனக்கு முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும் எனப் போர்க்கொடி தூக்கினார். இது தொடர்பாக ராகுல் காந்தி தனக்கு உறுதியளித்திருந்ததாகவும் கூறி சலசலப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக், ரண்தீப் சுர்ஜேவாலா போன்ற தலைவர்களை டெல்லிக்கு அவரை அழைத்துச் சமாதானப்படுத்தினர்.

டி.எஸ்.சிங் தேவ்
டி.எஸ்.சிங் தேவ்

இந்நிலையில், ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்திருக்கும் அவர், காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்தும், கட்சியில் ராகுல் நடத்தப்படும் விதம் குறித்தும் பல்வேறு கருத்துகளைப் பதிவுசெய்திருக்கிறார்.

“கட்சித் தலைவராக சோனியா காந்தியே தொடர வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். ஆனால், அதற்கு அவரது உடல்நிலை ஒத்துழைக்காது. இந்த நிலைமை தொடரக் கூடாது. கட்சிக்கு ஒரே அதிகார மையம்தான் இருக்க வேண்டும். கட்சித் தலைவர் பதவிக்கு வருபவர் ஆணோ, பெண்ணோ அவர் ஒற்றை ஆளுமையாக இருக்க வேண்டும். பல்வேறு அதிகார மையங்கள் இருக்கக்கூடாது. அது கட்சியின் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல” என்று அவர் கூறியிருக்கிறார்.

“ராகுல் காந்திக்கு ஒரு பாதகமான அம்சம் இருக்கிறது. அவர் ஒருபோதும் முற்றிலும் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கப்படவில்லை. ஆனால், ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்தால் அவர்தான் பழிச்சொற்களைத் தாங்க வேண்டியிருந்தது. சத்தீஸ்கரிலும் ராஜஸ்தானிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றபோது அதற்கான பாராட்டு அவரைச் சென்றடையவில்லை. மாறாக, ஏதேனும் தவறு நடந்தால் அவர் குற்றம்சாட்டப்படுகிறார். எனவே, யார் தலைவராக வந்தாலும் தவறு நேர்ந்தால் பழிச்சொல் ராகுல் காந்தி மீதுதான் விழும். அதற்குப் பதிலாக அவரே தலைவராகப் பொறுப்பேற்றுக்கொள்ளலாம்” என்றும் டி.எஸ்.சிங் தேவ் கூறியிருக்கிறார்.

சோனியா குடும்பத்தினர் அல்லாதோர் கட்சித் தலைமைக்கு வர வேண்டும் எனும் கருத்து பாஜகவின் கருத்தை எதிரொலிப்பதாகக் கூறியிருக்கும் அவர், சோனியா குடும்பத்தினரால்தான் காங்கிரஸைப் பாதுகாக்க முடியும் என்பது பாஜகவுக்குத் தெரியும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

கட்சித் தலைவர் தேர்தலில் வெளிப்படைத் தன்மை வேண்டும்; வாக்களிக்கவிருக்கும் பிரதிநிதிகளின் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்று மணீஷ் திவாரி, சசி தரூர், ஆனந்த் சர்மா போன்ற தலைவர்கள் முன்வைத்திருக்கும் கருத்தையும் டி.எஸ்.சிங் தேவ் விமர்சித்திருக்கிறார்.

“ஒரு நடைமுறை குறித்து கேள்வி கேட்கத் தொடங்கினால், அதற்கு முடிவே இருக்காது” என்கிறார் அவர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in