‘ஒருவருக்கு ஒரு பதவிதான்’ - அசோக் கெலாட்டுக்கு ராகுல் காந்தி மறைமுகமாக உணர்த்தும் சேதி என்ன?

‘ஒருவருக்கு ஒரு பதவிதான்’  - அசோக் கெலாட்டுக்கு ராகுல் காந்தி மறைமுகமாக உணர்த்தும் சேதி என்ன?

காங்கிரஸ் கட்சித் தலைவர் போட்டியில் முன்னணியில் இருக்கும் மூத்த தலைவர் அசோக் கெலாட், ராஜஸ்தான் முதல்வர் பதவியை விட்டுத்தரத் தயாராக இல்லை என உணர்த்திவருகிறார். இந்நிலையில், ‘ஒருவருக்கு ஒரு பதவிதான்’ எனும் காங்கிரஸ் கட்சி விதியை ராகுல் காந்தி நினைவூட்டியிருக்கிறார்.

அக்டோபர் 17-ல் காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. சோனியா குடும்பத்தினர் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டையே தலைவராகக் கொண்டுவர விரும்புகின்றனர். ஜி-23 தலைவர்களில் ஒருவரான காங்கிரஸ் எம்.பி சசி தரூரும், தலைவர் பதவிக்கான போட்டியில் இருக்கிறார். மறுபுறம், ராஜஸ்தான் காங்கிரஸில் சச்சின் பைலட்டுடன் மோதிக்கொண்டிருக்கும் அசோக் கெலாட், காங்கிரஸ் தலைவராக ஆகிவிட்டால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிடுவாரா எனும் கேள்வி எழுந்திருக்கிறது. சச்சின் பைலட்டும் அவரது ஆதரவாளர்களும் இதை உன்னிப்பாகக் கவனித்துவருகின்றனர்.

ஆனால், காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டாலும் ராஜஸ்தான் முதல்வர் பதவியை விட்டுத்தரப்போவதில்லை எனப் பிடிவாதமாக இருக்கிறார். சமீபத்தில், ‘நான் உங்களையெல்லாம் விட்டு அத்தனை தூரமாகச் சென்றுவிட மாட்டேன். கவலை வேண்டாம்’ எனத் தன் ஆதரவாளர்களிடம் அவர் கூறியிருந்தார். தனது விருப்பத்தை காங்கிரஸ் தலைமையிடமே அவர் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அசோக் கெலாட்
அசோக் கெலாட்

2018-ல் நடந்த ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸின் வெற்றிக்கு சச்சின் பைலட்டின் கடும் உழைப்பு முக்கியக் காரணியாக அமைந்தது. அதன் பலனாகத் தனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என்று அவர் நினைத்தார். ஆனால், மூத்த தலைவரான அசோக் கெலாட்டையே முதல்வராக்கியது காங்கிரஸ் தலைமை. இதையடுத்து அசோக் கெலாட்டுடனும், கட்சித் தலைமையுடனும் மோதிய சச்சின் பைலட், பின்னர் சமாதானமடைந்து காங்கிரஸ் கட்சியிலேயே தொடர முடிவெடுத்தார். அதேசமயம், சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் தனது அதிருப்தியைப் பதிவுசெய்ய அவர் தவறுதில்லை.

2020-ல், தனக்கு 30 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகச் சொன்ன சச்சின், தனது ஆதரவாளர்களுடன் குருகிராம் நகரில் முகாமிட்டார். பிரச்சினைகள் வலுத்ததால் துணை முதல்வர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.

முன்னதாக, மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்த கலகத்தைப் பயன்படுத்தி, ஜோதிராதித்ய சிந்தியாவைத் தங்கள் பக்கம் இழுத்து காங்கிரஸ் அரசைக் கவிழ்த்தது பாஜக. அதே பாணியில் சச்சின் பைலட்டை இழுக்கவும் பாஜக தரப்பிலிருந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மிகவும் தாமதமாகவே சுதாரித்துக்கொண்ட காங்கிரஸ் தலைமை, ஒருவழியாக சச்சினை சமாதானப்படுத்தியது. எனினும், கட்சிக்குள் கசப்பு தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

இப்படியான சூழலில், கேரளத்தில் இந்திய ஒற்றுமைப் பயணம் மேற்கொண்டிருக்கும் ராகுல் காந்தி, “உதய்ப்பூர் மாநாட்டில் நாம் ஒரு உறுதிமொழி எடுத்துக்கொண்டோம். அது கடைப்பிடிக்கப்படும் என எதிர்பார்க்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

ராஜஸ்தானின் உதய்ப்பூரில் மே மாதம் நடந்த மூன்று நாள் மாநட்டில் காங்கிரஸ் கட்சியினர் மேற்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. அவற்றில், ‘ஒருவருக்கு ஒரு பதவி’ என்பதும் தீர்மானிக்கப்பட்டது. இதைத்தான் ராகுல் காந்தி இன்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

“காங்கிரஸ் தலைவராக யார் வந்தாலும் சரி, அவருக்கு என் அறிவுரை இதுதான் - அவர் சில சிந்தனைகளின் தொகுப்பு, நம்பிக்கை அமைப்பு, இந்தியாவின் பார்வை ஆகியவற்றின் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்” என்றும் ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in