குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் வேட்பாளராக சரத் யாதவ்?

ராகுல் காந்தியுடனான சந்திப்பால் பரபரப்பு
குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் வேட்பாளராக சரத் யாதவ்?

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜுலை 19-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்குள் அப்பதவிக்கு மீண்டும் தேர்தல் நடைபெற உள்ளது. புதிய குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்யும் இத்தேர்தலில், நாடாளுமன்ற இரு அவைகளின் சுமார் 776 எம்.பி-க்கள் வாக்களிக்க வேண்டும். மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேச சட்டப்பேரவைகளின் உறுப்பினர்கள் சுமார் 4,120 பேரும்கூட இத்தேர்தலில் வாக்களிப்பார்கள். மக்கள்தொகை அதிகமுள்ள மாநிலங்களின் எம்எல்ஏ மற்றும் எம்பிக்களின் வாக்குகளுக்குக் கூடுதல் மதிப்புகள் உண்டு.

இந்த முறை குடியரசுத் தலைவர் தேர்தலில், தான் விரும்புபவரைத் தேர்வுசெய்ய, மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவுக்குப் போதுமான எம்.பி-க்கள் உள்ளனர். மொத்தம் 17 மாநிலங்கள் மற்றும் ஒரு ஒன்றியப் பிரதேசத்தில் கூட்டணி ஆட்சியும் பாஜகவிடம் உள்ளது. காங்கிரஸிடம் இரண்டு மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியிடம் ஒன்று மட்டும் ஆட்சியில் உள்ளனர். இதர சுமார் 11 மாநிலங்களில் பிராந்தியக் கட்சிகளின் ஆட்சி நிலவுகிறது. இதனால், எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்கள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த திட்டமிடுகின்றனர். இதற்கான முயற்சியை காங்கிரஸ் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் காங்கிரஸின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி, திடீரென முன்னாள் மத்திய அமைச்சரான சரத் யாதவுடன் சந்திப்பு நடத்தினார். இது சரத் யாதவை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட வைப்பதற்கான முயற்சி எனக் கருதப்படுகிறது. மக்களவையில் ஏழு முறையும், மாநிலங்களவைக்கு மூன்று முறையும் தேர்வாகி பணி செய்தவர் சரத் யாதவ். இவருடன் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜியுடனும் நட்பு உண்டு. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவரான சரத் யாதவ், பிஹார் அரசியலில் தீவிரம் காட்டுபவர்.

சரத் யாதவ் தற்போது அங்கம் வகிக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்குக் குடியரசு தலைவர் தேர்தலில் அதிக வாக்குகளும் உள்ளன. இதுபோன்ற காரணங்களால் சரத் யாதவ் அனைத்து எதிர்க்கட்சிகளாலும் பொது வேட்பாளராக ஏற்கப்படுவார் என்பது காங்கிரஸின் கணிப்பாக இருப்பதாகக் கருதப்படுகிறது. இவருக்கு வெற்றி வாய்ப்புகள் குறைவு என்றாலும், சரத் யாதவையே அனைத்து கட்சிகளின் பொது வேட்பாளராகவும் நிறுத்தும்படி பாஜகவிடமும் வலியுறுத்தப்படும் வாய்ப்புகள் உள்ளன.

பிஹாரில் ஆட்சி செய்யும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவராக பல ஆண்டுகள் இருந்தவர் சரத் யாதவ். இதன் பிஹார் முதல்வர் நிதீஷ் குமார் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்ததை எதிர்த்து அவர் லோக்தாந்திரிக் ஜனதா தளம் எனும் தனிக்கட்சியைத் தொடங்கியிருந்தார். ஆர்ஜேடி தலைமையிலான மெகா கூட்டணியுடன் இணைந்து தேர்தல்களில் போட்டியிட்டிருந்தார். இதில் எந்தப் பலனும் கிடைக்காததால், சமீபத்தில் தன் கட்சியை ஆர்ஜேடியுடன் இணைத்துக்கொண்டார்.

இந்தச் சூழலில், சரத் யாதவை ராகுல் காந்தி சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. இந்தச் சந்திப்பிற்குப் பின், “எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்தால்தான் பிரதமர் மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினரை எதிர்கொள்ள முடியும். இதற்காக எப்படி திட்டம் வகுப்பது என்ற ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. சரத்ஜி எனது அரசியல் குருக்களில் ஒருவர். அவருக்கு நீண்ட காலமாக உடல்நலம் சரியில்லாமல் இருந்தது. தற்போது அவரை கண்டு நான் மகிழ்தேன்” என்று ராகுல் தெரிவித்தார். குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்த கேள்விகளுக்கு அவர் நேரடியாகப் பதிலளிக்கவில்லை.

இந்தச் சந்திப்பு, குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தொடக்கம்தான். இன்னும் மேலும் பல அரசியல் நிகழ்வுகள் உள்ளதாகக் கருதப்படுகிறது. அனைத்துக் கட்சிகளின் பொது வேட்பாளராகி குடியரசுத் தலைவர் பதவியைப் பெற தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும் முயற்சிக்கிறார். கடந்த இரண்டு தேர்தல்களிலும் அவரது முயற்சி ஈடேற முடியாமல் போனது. இதற்காகவே அவர் சமீபத்தில் பிரதமர் மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்து நீண்ட நேரம் உரையாடியதாகத் தெரிகிறது.

Related Stories

No stories found.