‘படத்தைப் பற்றி அல்ல... படுகொலையைப் பற்றிப் பேசுங்கள் மோடி ஜி!’

காஷ்மீர் பண்டிட் படுகொலை சம்பவம் குறித்து ராகுல் பரபரப்பு ட்வீட்
‘படத்தைப் பற்றி அல்ல... படுகொலையைப் பற்றிப் பேசுங்கள் மோடி ஜி!’

காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த அரசு ஊழியர் ராகுல் பட் கடந்த வாரம் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கையில் எடுத்துக்கொண்டிருக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காஷ்மீர் பண்டிட்கள் குறித்த திரைப்படத்துக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை காஷ்மீர் பண்டிட்களின் இனப்படுகொலைக்குக் கொடுக்கவில்லை என பிரதமர் மோடியை விமர்சித்திருகிறார்.

1990-களில் காஷ்மீர் பண்டிட்கள் பயங்கரவாதிகளால் வெளியேற்றப்பட்ட நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்துக்கு பாஜகவினர் மிகப் பெரிய அளவில் ஆதரவளித்தனர். பாஜக ஆளும் மாநிலங்களில் அப்படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது, வரிவிலக்கு தர மறுத்து படத்தை விமர்சித்த டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இல்லத்தின் முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியது, சில பாஜக தலைவர்கள் மொத்தமாக அப்படத்தின் டிக்கெட்டுகளை வாங்கி மக்களுக்கு இலவசமாக விநியோகித்தது என்பதில் தொடங்கி பிரதமர் மோடியே அப்படத்தைப் புகழ்ந்தது என ஏராளமான நிகழ்வுகள் நடந்தன. அதேவேளையில், காஷ்மீர் பண்டிட்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக போதுமான நடவடிக்கைகளை எடுக்காத மோடி அரசு, அவர்களைப் பற்றிய திரைப்படத்துக்கு விளம்பரம் செய்வது மட்டும் போதுமா எனும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

அந்தப் படத்திலும் காஷ்மீர் பண்டிட்களின் வெளியேற்றத்துக்குக் காங்கிரஸ், காஷ்மீர் அரசியல் கட்சிகள், இடதுசாரிகள், மதச்சார்பற்ற சக்திகள்தான் காரணம் என்றே சித்தரிக்கப்பட்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் மத்திய அரசில் கூட்டணியில் அங்கம் வகித்த பாஜக, காஷ்மீர் பண்டிட்களின் வெளியேற்றத்தைத் தடுக்க என்ன முயற்சி எடுத்தது என்பன போன்ற கேள்விகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன.

இந்தச் சூழலில், காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தின் சதூரா நகரில் உள்ள தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்துவந்த ராகுல் பட் எனும் அரசு ஊழியர், கடந்த வியாழக்கிழமை (மே 12) பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில், 2010-11-ல் புலம்பெயர்ந்தோருக்கான சிறப்பு வேலைவாய்ப்புத் திட்டத்தில் அரசுப் பணியில் சேர்ந்தவர்.

இந்நிலையில், ராகுல் பட்டின் மனைவி தனது கணவரின் மரணம் குறித்துப் பேசும் காணொலியை ட்விட்டரில் பகிர்ந்திருக்கும் ராகுல் காந்தி, காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்தும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடியை வலியுறுத்தியிருக்கிறார்.

இந்தி மொழியில் வெளியிட்டிருக்கும் அந்த ட்வீட்டில், ‘காஷ்மீர் பண்டிட்கள் இனப்படுகொலை பற்றி பேசுவதைவிட, ஒரு படத்தைப் பற்றிப் பேசுவதுதான் பிரதமருக்கு முக்கியம் போலும். பாஜகவின் கொள்கைகளால் காஷ்மீரில் இன்று பயங்கரவாதம் உச்சத்தில் உள்ளது. பிரதமரே, பாதுகாப்புப் பொறுப்பை ஏற்று அமைதியை ஏற்படுத்த முயற்சி செய்யுங்கள்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார் ராகுல் காந்தி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in