பைக் ஓட்டி அசத்திய ராகுல் காந்தி!

‘பாரத் ஜோடோ’ நடைப் பயணத்தில் சுவாரசியம்
பைக் ஓட்டி அசத்திய ராகுல் காந்தி!

இந்திய ஒற்றுமை (பாரத் ஜோடோ) நடைப் பயணத்தில் ஈடுபட்டிருக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தற்போது மத்திய பிரதேசத்துக்குள் பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்தப் பயணத்தின் ஒருபகுதியாக, இன்று காலை அவர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றது காங்கிரஸ் தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

செப்டம்பர் மாதம் தமிழகத்தில் தொடங்கிய இந்திய ஒற்றுமைப் பயணம் மொத்தம் 3,500 கிலோமீட்டர் தொலைவுக்குத் திட்டமிடப்பட்ட நடைப்பயணம் ஆகும். இதுவரை பாதி தொலைவைக் கடந்திருக்கும் ராகுல் காந்தி, ஜனவரி மாதத்தில் இதை நிறைவுசெய்யவிருக்கிறார்.

தற்போது மத்திய பிரதேசத்தில் தனது பயணத்தைத் தொடர்ந்துவரும் ராகுல் காந்தியிடம், விலங்குகள் நலன் குறித்து விவாதிப்பதற்காக குவாலியரைச் சேர்ந்த ரஜத் பிரஷார் எனும் நபரும் அவரது நண்பரும் அவரை அணுகினர்.

சிவில் இன்ஜினியராகப் பணிபுரியும் ரஜத், தெருநாய்களைக் காப்பாற்றி பராமரிக்கும் சேவையில் ஈடுபட்டிருக்கிறார். அவர் தனது பைக்கில் ஜெர்மன் ஷெப்பர்டு ரக நாய் ஒன்றையும் அமர வைத்து காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பைக்கிலேயே வலம் வந்த அனுபவம் கொண்டவர். இதற்காகத் தனது பைக்கில் நாய் அமரும் வகையில் சிறப்பு இருக்கையை உருவாக்கியிருக்கிறார்.

ஏற்கெனவே ராகுல் காந்தியைச் சந்திக்க முயன்று அது சாத்தியமாகாத நிலையில், இந்தோர் மாவட்டத்தின் மஹூ நகரில் பயணம் மேற்கொண்டிருந்த அவரை இன்று காலை அவரைச் சந்தித்துப் பேசினார் ரஜத். அவரது பைக்கைத்தான், ராகுல் காந்தி சிறிது தூரம் ஓட்டிச் சென்றார்.

நீல நிறத் தரை விரிப்பில் பைக்கை அவர் ஓட்டிச் சென்றபோது காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in