‘அரசியல் கசப்புகளுக்கு இடையே அரிதான தருணம்’ - ராகுலைப் பாராட்டிய ராவத்!

‘அரசியல் கசப்புகளுக்கு இடையே அரிதான தருணம்’ - ராகுலைப் பாராட்டிய ராவத்!

இந்திய ஒற்றுமைப் பயணத்துக்கு நடுவே, தன்னை அழைத்து நலம் விசாரித்த ராகுல் காந்தியால் நெகிழ்ந்துபோயிருக்கிறார் சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத். அரசியல் கசப்புணர்வுக்கு மத்தியில் இது அரிய தருணம் என்று புகழாரம் சூட்டியிருக்கிறார்.

செப்டம்பர் 7 முதல் பாரத் ஜோடோ எனும் பெயரில் இந்திய ஒற்றுமைப் பயணத்தை மேற்கொண்டுவருகிறார் ராகுல் காந்தி. தற்போது மகாராஷ்டிரத்தில் இருக்கும் அவர், வரும் 23-ம் தேதி மத்திய பிரதேசத்துக்குள் நுழையவிருக்கிறார்.

இதற்கிடையே, பண மோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்டு மும்பையின் ஆர்தர் சாலைச் சிறையில் இருந்த சஞ்சய் ராவத் சமீபத்தில் நவம்பர் 9-ல் ஜாமீனில் வெளிவந்தார்.

இந்நிலையில், ராகுல் காந்தி போனில் அழைத்து சஞ்சய் ராவத்திடம் நலம் விசாரித்திருக்கிறார். இதுதொடர்பாக, ட்வீட் செய்திருக்கும் சஞ்சய் ராவத், ‘சில விஷயங்கள் குறித்து உறுதியான எதிர்க்கருத்துகள் இருக்கும் நிலையிலும், அரசியல் சகாவை அழைத்து நலம் விசாரிப்பது என்பது மனிதாபிமானத்தின் ஓர் அடையாளம். இந்திய ஒற்றுமைப் பயணத்தில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் நிலையிலும் நேற்று என்னை அழைத்து என் உடல்நலம் குறித்து ராகுல் காந்திஜி விசாரித்தார். ‘உங்கள் உடல்நலம் குறித்து கவலையடைந்தோம்’ என்று கூறினார்’ என அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

‘110 நாட்கள் சிறையில் இருந்த ஓர் அரசியல் சகாவின் வலியை உணர்ந்துகொண்ட அவரது அனுதாப உணர்வை நான் பாராட்டுகிறேன். அரசியல் கசப்புணர்வு நிலவும் காலத்தில், இப்படியான வெளிப்பாடுகள் மிகவும் அரிதாகிவருகின்றன. ராகுல் ஜி தனது பயணத்தில் அன்பு மற்றும் பரிவில் கவனம் செலுத்திவருகிறார். அதனால்தான் அவருக்கு அபரிமிதமான வரவேற்பு கிடைக்கிறது’ என்றும் சஞ்சய் ராவத் தெரிவித்திருக்கிறார்.

இந்துத்துவ சிந்தனையாளர் சாவர்க்கர் குறித்த விமர்சனங்களால் ஆர்எஸ்எஸ், பாஜக மட்டுமல்லாது சிவசேனாவும் ராகுல் காந்தியைக் கடுமையாக விமர்சித்துவருகிறது. ராகுல் காந்தியின் கருத்தை ஏற்கவில்லை என்று சிவசேனா தலைவரும் முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே கூறியிருந்தார்.

சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர், சிவசேனா எம்.பி ராகுல் ஷிவாலே ஆகியோர் ராகுல் காந்தி மீது புகார் பதிவுசெய்திருக்கின்றனர். இப்படியான கசப்புகளுக்கு மத்தியில்தான் கட்சி வேறுபாடு தாண்டி நெகிழ்ச்சி காட்டியிருக்கிறார் சஞ்சய் ராவத்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் ராகுல் காந்திக்கு ஆதரவாகப் பேசியவர் சஞ்சய் ராவத் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசியுங்கள்:

‘அரசியல் கசப்புகளுக்கு இடையே அரிதான தருணம்’ - ராகுலைப் பாராட்டிய ராவத்!
ராகுலுக்குத் துணை நிற்கும் ராவத்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in