மூவர்ணக் கொடியை வைக்கச் சொன்ன மோடி: ஒரு ‘ட்விஸ்ட்’டுடன் டிபி மாற்றிய ராகுல்!

மூவர்ணக் கொடியை வைக்கச் சொன்ன மோடி: ஒரு 
‘ட்விஸ்ட்’டுடன் டிபி மாற்றிய ராகுல்!

ஆகஸ்ட் 2 முதல் 15 வரை மக்கள் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களின் சுயவிவரப் படமான டிபி-யில் தேசியக் கொடியை வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்த நிலையில், அந்த வேண்டுகோளை ஏற்று தனது டிபி-யை மாற்றியிருக்கும் ராகுல், அதன் மூலம் மோடிக்கு ஒரு செய்தியையும் உணர்த்தியிருக்கிறார்.

‘இன்றைய தினமான ஆகஸ்ட் 2 ஒரு சிறப்பான தினம். ‘ஆஸாதி கா அம்ருத் மஹோத்ஸவ்’ இயக்கத்தைக் கொண்டாடும் ஒரு தருணத்தில், நமது மூவர்ணக் கொடியைக் கொண்டாடும் ஒரு கூட்டு இயக்கமாக ‘ஹர் கர் திரங்கா’ இயக்கத்துக்கு நமது தேசம் தயாராகிவருகிறது. சமூகவலைதளப் பக்கங்களில் எனது புரொஃபைல் படத்தை மாற்றிவிட்டேன். நீங்களும் அதைச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்’ என நேற்று பிரதமர் மோடி ட்வீட் செய்திருந்தார். தேசியக் கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கய்யாவுக்கு இன்னொரு ட்வீட்டில் புகழஞ்சலியும் செலுத்தியிருந்தார்.

முன்னதாக, கடந்த ஞாயிறு அன்று ஒலிபரப்பான ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘இல்லம்தோறும் மூவர்ணக் கொடி’ இயக்கத்தை மாபெரும் வெற்றியடையச் செய்யும் வகையில், ஆகஸ்ட் 2 முதல் 15 வரை மக்கள் தங்கள் சமூகவலைதளப் பக்கங்களின் சுயவிவரப் படங்களில் தேசியக் கொடியை வைக்குமாறு கேட்டுக்கொண்டார். “தனது 75-வது சுதந்திர தினத்தை நிறைவுசெய்யும் இந்தியா, ஒரு மகத்தான வரலாற்றுத் தருணத்தைக் காணவிருக்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டார். பிரதமரின் வேண்டுகோள்களை ஏற்று பாஜக தலைவர்களும், பொதுமக்களில் பலரும் தங்கள் டிபி-யில் தேசியக் கொடியின் படத்தை வைத்திருக்கின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் டிபி-யை மாற்றியிருக்கிறார். இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு தேசியக் கொடியைக் கையில் ஏந்தியபடி அதைப் பார்த்துக்கொண்டிருக்கும் படத்தைத் தனது டிபி-யாக அவர் வைத்திருக்கிறார். படத்தில் நேருவின் உருவம் கறுப்பு - வெள்ளையிலும் தேசியக் கொடி வண்ணத்திலும் இடம்பெற்றிருக்கின்றன. கூடவே, ‘மூவர்ணக் கொடி இந்தியாவின் பெருமை. அது ஒவ்வொரு இந்தியரின் இதயத்தில் இருக்கிறது’ என்று இந்தியில் ட்வீட் செய்திருக்கிறார். பிரியங்கா காந்தியும் அதே படத்தை டிபியாக வைத்திருக்கிறார்.

நேருவின் ஆட்சிக்காலம் குறித்து அவ்வப்போது விமர்சனங்களை முன்வைக்கும் பிரதமர் மோடிக்கு இதன் மூலம் தன் பாணியில் பதிலடி தந்திருக்கிறார் ராகுல்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in