கோயில் திருவிழாவில் கானா பாடி கேலி செய்ததால் ஆத்திரம்: நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவத்தில் அதிர்ச்சி பின்னணி

கோயில் திருவிழாவில் கானா பாடி கேலி செய்ததால் ஆத்திரம்:
நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவத்தில் அதிர்ச்சி பின்னணி

கோயில் திருவிழாவில் கானா பாடல் பாடி கேலி செய்ததால் ஏற்பட்ட மோதலில் நாட்டு வெடிகுண்டு வீசி இருதரப்பினர் மோதலில் ஈடுபட்டது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சென்னை ஜாபர்கான் பேட்டை அன்னை சத்தியா நகர் 6-வது தெருவைச் சேர்ந்தவர் சிவில் என்ஜினியர் பாலாஜி(25). அதே பகுதியில் வசிக்கும் சினிமா எலக்ட்டீரிசியன் மற்றும் கல்லூரி மாணவன் ஜானேஷ்வரன்(20) ஆகியோர் நேற்று இரவு பாலாஜி வீட்டின் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த அதே பகுதியில் வசிக்கும் பிரகாஷ், அவ்வழியாக வந்து கொண்டிருந்த பாலாஜியின் நண்பர் மணியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதனைப் பார்த்த பாலாஜியின் தந்தை கோபால், பிரகாஷைத் தட்டி கேட்டுள்ளார். உடனே அங்கிருந்த பிரகாஷின் நண்பர்கள் அவர்களிடம் சண்டையிட்டனர். இதனால் பாலாஜி மற்றும் பிரகாஷ் நண்பர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.



பின்னர் இருதரப்பினரும் ஒருவர் ஒருவர் பயங்கர ஆயுதங்களால் தாக்கிக்கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த பாலாஜி மற்றும் அவரது சகோதரர் பரத் இருவரும் உடனே வீட்டில் இருந்த நாட்டு வெடிகுண்டை கொண்டு வந்து பிரகாஷ் ஆதரவாளர்கள் மீது வீசினர். இதில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் காயமடைந்த பரத் உட்பட இருவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த எம்ஜிஆர் நகர் போலீஸார், அவர்களை விரட்டி அடித்ததுடன் பாலாஜி, ஜானேஷ்வரன், கோபி ஆகிய 3 பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். பின்னர் இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பாலாஜி, கோபி, ஜானேஷ்வரன் மற்றும் ராஜா,கேசவன் முரளி, மணி, பிரகாஷ், பிரவீன் தண்டபாணி, யோகி மற்றும் அதே தெருவில் வசிக்கும் சிலரும் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.. கடந்த 2018-ம் ஆண்டு பாலாஜி மற்றும் அவரது நண்பர்கள் சிலர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.
அன்று முதல் பாலாஜி நண்பர்களுக்கும், பிரகாஷ் நண்பர்களுக்கும் இடையே சிறு, சிறு மோதல்கள் ஏற்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சத்தியா நகர் 2-வது தெருவில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. அப்போது பரத் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரகாஷ் கோஷ்டியினரை கேவலமாக கானா பாடல் பாடி அசிங்கபடுத்தியுள்ளார். இதனால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

அதனைத் தொடர்ந்து நேற்று இரவு பிரகாஷ், பாலாஜியின் நண்பர் மணியிடம் தகராறில் ஈடுபட்டதால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு நாட்டு வெடிகுண்டு வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து பாலாஜி, ஜானேஷ்வரன், கோபி ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய பாலாஜியின் நண்பர்கள் மற்றும் எதிர்தரப்பை சேர்ந்த பிரகாஷ், கேசவன், முரளி மணி,பிரவீன்,தண்டபாணி , யோகி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோரை போலீஸார் தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in