
தன்னையும், மகளையும் கடித்த வளர்ப்பு நாயைக் கொன்று ஏரியில் வீசச்சென்ற பெண், அதே ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் ரூபி. இவர் வீட்டில் நாய் வளர்த்து வந்தார். இந்த நிலையில் இவர் வளர்த்த நாய், ரூபியின் மகளைக் கடித்தது. அத்துடன் ரூபியைக் கடித்தது. இதனால் ஆத்திரமடைந்த ரூபி, தான் செல்லமாக வளர்த்து வந்த நாயைக் கொன்று ஏரியில் மூழ்கடிக்க முடிவு செய்தார்.
அதன்படி நாயை அடித்துக் கொன்று ஏரியில் வீசுவதற்காக நேற்று சென்றார். ஆனால், நீண்ட நேரமாகியும் ரூபி வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் ரூபியைத் தேடினர். அப்போது ஏரியின் வெளியே ரூபியின் செருப்புகள் கிடந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த ரூபியின் குடும்பத்தினர், காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் உதவியுடன் ஏரியில் ரூபியைத் தேடினர். நீண்ட நேரத்திற்குப் பின், ரூபியின் சடலம் ஏரியில் இருந்து மீட்கப்பட்டது. நாயைக் கொன்று ஏரியில் போடச் சென்ற போது நீரில் மூழ்கி ரூபி இறந்ததிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து கிழக்கு மண்டல காவல்துறை ஏடிசிபி சையது அலி அப்பாஸ் கூறுகையில்," ரூபியின் இறப்பிற்கான காரணத்தை அறிய அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் பிரதே பரிசோதனை அறிக்கை வந்த பின் என்ன நடந்தது என்று கூற முடியும்" என்றார். பெண் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.