அறங்காவலர்கள் விண்ணப்பத்தில் அரசியல் தொடர்பான கேள்விகள்: அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

அறங்காவலர்கள் விண்ணப்பத்தில் அரசியல் தொடர்பான கேள்விகள்: அறநிலையத்துறைக்கு  நீதிமன்றம் உத்தரவு

கோயில்களின் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான விண்ணப்பங்களில், விண்ணப்பிப்பவர்களின் அரசியல் தொடர்பு குறித்த கேள்வியுடன் கூடிய பகுதியைச் சேர்க்க வேண்டும் என அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கக் கோரிய வழக்குகள், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக மாவட்ட அளவில் குழுக்கள் நியமிக்கப்படும் பணிகள் நடைபெறுகின்றன எனவும், 34 மாவட்டங்களில் இப்பணிகள் நடந்து வருவதாகவும், அனைத்துக் கோயில்களிலும் அறங்காவலர்கள் நடைமுறையை முடிக்க, 12 மாத அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ள 560 கோயில்களுக்கு அரசே அறங்காவலர்களை நியமிக்கும் எனவும் இதுவரை 8 கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் அறநிலையத் துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில், அரசியல் சார்பற்றவர்களை அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட போதும், அறங்காவலர் நியமனத்துக்கான விண்ணப்பத்தில், அரசியல் சார்பு குறித்த எந்தக் கேள்வியும் இடம்பெறவில்லை எனவும், இது உயர் நீதிமன்ற உத்தரவை மீறிய செயல் எனவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து அறங்காவலர் விண்ணப்பத்தில், விண்ணப்பிப்பவர் அரசியல் கட்சியை சேர்ந்தவரா? இல்லையா? என்ற கேள்வி இடம்பெறும் என அறநிலையத் துறை தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அறங்காவலர் விண்ணப்பங்களில், விண்ணப்பிப்பவர்களின் அரசியல் சார்பு குறித்த பகுதியை இரண்டு வாரங்களில் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in